தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த  தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் அறிமுக கட்சியான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டுள்ளார்.


வாக்குப்பதிவுகள் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவு அடைந்து, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கோவை ஜி.எஸ்.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி, கல்லூரியில் நடிகர் கமல்ஹாசன் சற்று முன் வாக்கு இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அவருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான மகேந்திரன் உடனிருந்தார். கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கமல்ஹாசன் நேற்று அத்தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.