ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


குறிப்பாக சென்னை அணியின் 20-வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சை வெளுத்து கட்டினார். ஒரே ஓவரில் 5 சிக்சர் மட்டும் ஒரு பவுண்டரி விளாசி ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் கடந்த 2011-ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் அடித்திருந்த 37 ரன்கள் என்ற சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார். 




ஜடேஜாவின் இந்த அதிரடி ஆட்டம் ட்விட்டர் பக்கத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பாக பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  






நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக சிறப்பாக பிரகாசித்து வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்து அசத்தினார். அத்துடன் அந்தப் போட்டியில் முக்கியமான பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.  அதேபோல் இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 62* ரன்கள், 3 விக்கெட்கள் மற்றும் ஒரு சிறப்பான ரன் அவுட் என மீண்டும் பேட்டிங்,பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். 






2008-ஆம் ஆண்டு ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணி அப்போது ஐபிஎல் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 9.8 கோடி ரூபாய்க்கு சென்னை அணி அவரை எடுத்தது. அப்போது முதல் சென்னையின் ஒரு தூணாக இருந்து வருகிறார். தோனிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் அவரின் துருப்புச் சீட்டாக ஜடேஜா இருந்து வருகிறார். எனவே தான் 2018-ஆம் ஆண்டு சென்னை அணி தக்கவைத்து கொண்ட வீரர்களில் இவரும் ஒருவராக இருந்தார். 






பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் ஜடேஜா அசத்துவது சென்னை அணிக்கு பெரிய பலமாக உள்ளது. இன்றைய போட்டியில் ஜடேஜாவின் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி அவரை பாராட்டினார். ஆட்டத்திற்கு பிறகு பேசிய கோலி, “ஜடேஜா எப்போதும் சிறப்பான வீரர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தற்போது அவர் மீண்டும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நன்றாக விளையாடினால் அது சென்னை அணிக்கு மட்டும் பலம் அல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கும் அது பெரிய பலமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.