ரவீந்திர ஜடேஜா (
Ravindra Jadeja) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (
Chennai Super Kings (CSK) தொடர்ந்து நீடிப்பாரா என்று எழுந்துவரும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் தனது ட்வீட் கமெண்ட்டை நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 ஆண்டு கொண்டாட்டம்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இணைந்து 10 ஆண்டு கொண்டாட்டத்திற்காக, அணி நிர்வாகம் சிறப்பு போஸ்ட் பதிவிட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் போஸ்ட் செய்யப்பட்ட ட்வீட்டில் ஜடேஜா இன்னும் பத்தாண்டுகளுக்கு தொடரும் ("10 more to go," ) என்று கமெண்ட் செய்திருந்தார். தற்போது, ஜடேஜா அதை நீக்கியுள்ளார். இதை கவனித்த ரசிகர்களும் நெட்டிசன்களும், ஜடேஜாவின் செயலை குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா தொடர மாட்டாரா என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பதிவுகள் நீக்கம்..
கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் இருந்து சென்னை அணி தொடர்பான பதிவுகள் அனைத்தையும் நீக்கியிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 2022 ஐ.பி.எல். போட்டியில், ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது. 2022 ஆண்டுக்கான
ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டனாக ஜடேஜாவை சென்னை அணி நிர்வாகம் நியமித்தது. தோனியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும் அணியின் நலனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் நினைத்தது ஒன்று ..நடந்தது ஒன்று என்ற கதையாக ஜடேஜா தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் தொடரில் சொதப்பியது. ஜடேஜா டாஸ் போட மட்டும் தான் கேப்டனாக இருக்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தோனி தான் எல்லா முடிவையும் எடுக்கிறார் என்ற பல விமர்சனங்கள் எழத் தொடங்கிய நிலையில் ஜடேஜா பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தோனியிடம் கேப்டன் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின் காயத்தால் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஜடேஜா விளையாடவில்லை.
பத்திரிகையாளர் சந்திப்பு..
இதனிடையே சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதமடித்து அசத்தினார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிஎஸ்கே குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்காக ஆடுவதால் அதைப் பற்றி கேளுங்கள் என பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். இந்நிலையில் ஜூலை 7 ஆம் தேதி தோனி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஜடேஜா தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதலில் இன்ஸ்டாகிராம், இப்போது டிவிட்டரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவுகளை ஜடேஜா நீக்கியுள்ளார். இது 2023 சீசனில் சென்னை அணியில் ஜடேஜா விளையாடமாட்டாரா என்ற கேள்வியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.