இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியில் அஷ்வின் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் கமெண்ட் செய்தனர்.
இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் செல்லும்போது அணி வீரர்களின் குடும்பதினரும் உடன் செல்வது வழக்கம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர் அஷ்வினின் குடும்பத்தினரும் லண்டன் சென்றுள்ளனர். நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று அஷ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், “அஷ்வினை தேடி” என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். பைனாக்குலரில் மைதானத்தை பார்த்து கொண்டிருந்த அவரது மகள், அஷ்வினை தேடிக்கொண்டிருக்கிறார் என்பது போல பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் அஷ்வின் இடம் பெறாதது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. கேப்டன் கோலி வேறு திட்டத்தோடு களமிறங்கி இருந்தாலும், அது எந்த அளவுக்கு சாதகமாக என்பதை போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.