வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாக விளங்குவது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 11 ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து உள்ளிட்ட ஜாம்பவான் அணிகளையே வீழ்த்தியுள்ளது. மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கே சவால் விடும் அளவிற்கு திறமையான ஆட்டத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலககோப்பைக்கான கிரிக்கெட் அணியை நேற்று அறிவித்தது. இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கான கேப்டனாக ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஷீத்கான் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக, ரஷீத்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், அணியின் கேப்டனாகவும் பொறுப்பான நபராகவும் அணியை தேர்வு செய்வதில் எனக்கும் பங்கு உண்டு. அணியின் தேர்வு குழு மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யப்பட்ட அணிக்காக எனது ஒப்புதலைப் பெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிக்கொள்ள முடிவு செய்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்போதும் விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். “ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த மாதம் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் அந்த நாட்டை கைப்பற்றியதற்கு ரஷீத்கான் மிகுந்த வேதனை தெரிவித்திருந்தார். தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டிற்கு எந்த தடையும் விதிக்காத அவர்கள் பெண்கள் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.




இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷீத்கான் விலகியுள்ளதால், அணியின் கேப்டன் பொறுப்பை ஆல்ரவுண்டர் முகமது நபி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷீத்கான் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் ஆடி 140 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 51 டி20 போட்டிகளில் ஆடி 95 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐதராபாத் அணிக்காக 69 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 85 விக்கெட்டுகைளையும் கைப்பற்றியுள்ளார்.


ரஷீத்கான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார். அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 106 ரன்களையும், 74 ஒருநாள் போட்டிகளில் 1008 ரன்களையும், 51 டி20 போட்டிகளில் 179 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 156 ரன்களையும் குவித்துள்ளார். ரஷீத்கான் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.