நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் மும்பையில் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் வீரர்கள் அனைவரும் பயோ பபுள் முறையில் இருந்து வருகின்றனர். இந்த பயோ பபுள் முறை வீரர்களுக்கு பெறும் சவாலை தந்து வருகிறது. 


 


இந்நிலையில் பயோ பபுள் முறையால் மன அழுத்தம் ஏற்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் நாடு திரும்பியுள்ளார். இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது இந்தியா வந்தார். அப்போது முதல் இந்தியாவில் பயோ பபுள் முறையில் உள்ளார். 


 


மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களுக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெற்று இருந்தார். இதனால் அப்போதும் பயோ பபுள் முறையில் இருந்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இவர் பங்கேற்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். 





ஆகவே கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பயோ பபுள் முறையில் இருப்பதால் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும் ஏற்று அவரை வழி அனுப்பியுள்ளது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இவர் களமிறங்கவில்லை. 


 


இவரின் விலகல் ராஜஸ்தான் அணிக்கு ஒரு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஏற்கெனவே முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதுகு அறுவை சிகிச்சைக்கு பிறகு இன்னும் அணியில் சேரவில்லை. இந்தச் சூழலில் தற்போது லிவிங்ஸ்டோனும் விலகியுள்ளது பெரும் பின்னடைவை தந்துள்ளது.  நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை மூன்று போட்டிகளில் பங்கேற்று 1 வெற்றி மற்றும் 2 தோல்வியை பெற்றுள்ளது. நாளை மும்பையில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 





ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சன்ரைசர்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். அவரும் பயோ பபுள் முறையை சுட்டிக்காட்டி விலகுவதாக தெரிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயோ பபுள் முறை வீரர்களுக்கு பெரிய சுமையாக அமைந்துள்ளது. ஆகவே வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் தொடர்களுக்கு நடுவில் நல்ல இடைவேளை இருந்தால் நல்லது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனை ஐசிசி மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.