இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தினால் மகாராஷ்ட்ரா, டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக, பல்வேறு வடிவங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்திலும் இன்று இரவு 10 மணிமுதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தைப் போலவே கடந்த சில தினங்களாகவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதைத் தடுப்பதற்காக அந்த மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் இருந்தது.
இந்த நிலையில், புதுவையிலும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரரராஜன் முடிவு செய்துள்ளார். இதன்படி, புதுவையில் வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுச்சேரிக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தவிர, முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் புதுவை முழுவதும் கடைகள் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அனுமதிபெற்ற கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் மதியம் 2 மணிக்கு பின் பார்சல்கள் வழங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நாளை முதல் குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்படும் என்றும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் தேரோட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் கொரோனா விதிகளுடன் வழிபாடுசெய்ய மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் அளவிற்கு கர்நாடகாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அம்மாநில முதல்வர் எடியூரப்பா பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார், தற்போது, கர்நாடகாவிலும் நாளை இரவு முதல் வரும் மே 4-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் இரவு நேரத்தில் போக்குவரத்து சேவை தடைபட உள்ளது. அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.