விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால், இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் மற்றம் டி20 தொடரில் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.


இந்த போட்டித்தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல்டிராவிட் செயல்பட்டார். ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சியின்கீழ் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றநிலையில், கொரோனாவால் வீரர்கள் அவதிப்பட்டதால் அனுபவமற்ற வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.




இந்த நிலையில், தனது பயிற்சியாளர் அனுபவம் தொடர்பாக ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,


“  பயிற்சியாளராக இதை மிகவும் மகிழ்ச்சிகரமாக உணர்ந்தேன். உண்மையில் நான் இதற்கு முன்பு எதையும் யோசிக்கவில்லை. உண்மையிலே வெளிப்படையாக சொல்கிறேன் அவர்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்த சுற்றுப்பயணம் மற்றும் இந்த சுற்றுப்பயணத்தை தவிர வேறு எந்த சிந்தனையையும் நான் கொடுக்கவில்லை. இவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். சீனியர் அணிக்கு முழுநேர பயிற்சியாளராக பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.


ராகுல் டிராவிட்  இந்திய அணியின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளனர். சுப்மான் கில், இஷான்கிஷான் என இந்திய அணியின் வளரும் வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




50 வயதான ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 ஆயிரத்து 288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 889 ரன்களையும், 89 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 174 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களையும், 5 முறை இரட்டை சதங்களையும் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களையும் அடித்துள்ளார்.  


தற்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி பணியாற்றி வருகிறார். ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய அணி உலககோப்பை அரையிறுதிப்போட்டி வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.