டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்று மகளிர் வட்டு எறிதலுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் சீமா புனியா மற்றும் கமல்பிரீத் கவுர் ஆகிய இருவரும் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் 64 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். அப்படி இல்லையென்றால் முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் முதலில் குரூப் ஏ பிரிவில் சீமா புனியா பங்கேற்றார். அவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 60.57 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் மூன்றாவது வாய்ப்பில் 58.93 மீட்டர் தூரம் வீசினார். இதனால் அந்த குரூப் பிரிவில் அவர் 6ஆவது இடத்தை பிடித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற குரூப் பி தகுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பங்கேற்றார். இவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் 60.29 மீட்டர் தூரம் வீசினா. அதன்பின்னர் கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட கமல்பிரீத் கவுர் 63.97 மீட்டர் வீசி அசத்தினார். தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்குதகுதிப் பெற்று அசத்தினார். இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக தடகள விளையாட்டில் முதல் நாளான நேற்று 000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்றார். இவர் 5ஆவது ஹீட்ஸில் ஓடினார். இந்தச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறியுள்ளார். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டூட்டி சந்த் பங்கேற்றார். அவர் 100 மீட்டர் முதல் சுற்றில் 5ஆவது ஹீட்ஸ் பிரிவில் ஓடினார். டூட்டி சந்த் பந்தைய தூரத்தை 11.54 நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 11.17 விநாடிகள் என்பதை விட மிகவும் அதிகமான ஒன்றாகும். இதனால் மகளிர் 100 மீட்டர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை டூட்டி சந்த் இழந்தார். அத்துடன் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அமித் பங்கால் ஏமாற்றம் !