இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றதால் இலங்கை தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


பொதுவாக இந்திய அணி எந்த தொடருக்கும் கிளம்புவதற்கு முன்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். அந்தவகையில் இன்று தவான் மற்றும் டிராவிட் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை காணொலி மூலம் சந்தித்தனர். அப்போது பேசிய பயிற்சியாளர் டிராவிட், இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார்.



முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அடுத்து, டி-20 உலகக்கோப்பை தொடரையே கிரிக்கெட் உலகில் பெரிது எதிர்பார்க்கப்படும் தொடர். இந்நிலையில், இந்தியாவில் நடக்க இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக ஐசிசி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.


அக்டோபர் 17-ம் தேதி தொடங்க இருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கு முன், மூன்று டி-20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பங்கேற்க உள்ளது. இது குறித்து பேசிய ராகுல் டிராவிட், ”டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு முன், இலங்கைக்கு எதிரான 3 டி-20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நேரம், டி-20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணி குறித்து அணி தேர்வாளர்கள் முடிவு செய்திருப்பர். எனினும், சில இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டி இருக்கலாம். இதனால், இனி வரும் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடினால், வாய்ப்பு கிடைக்கலாம்” என்றார்.






இந்தியா ‘ஏ’ மற்றும் U-19 அணிகளுக்கு பயிற்சி செய்து வந்த ராகுல் டிராவிட், இப்போது இந்த மினி தொடருக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், “சற்று வித்தியாசமான அனுபவமாக உள்ளது. 20 பேர் கொண்ட குழுவாக இத்தொடருக்கு பயணிக்க இருக்கின்றோம். அனைவருக்கும் இத்தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால், தொடரை வெல்வதற்கு தேவையான வெற்றி அணிக்கே வாய்ப்பு வழங்கப்படுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த தொடரின் மூலம் நானும் நிறைய கற்றுக்கொள்ள இருக்கின்றேன். என்னை பற்றியும், கிரிக்கெட்டை பற்றியும் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள இருக்கின்றேன். சொல்லப்போனால், ’excited’ ஆக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.


இந்திய அணி ஜூலை 13,16,18 ஆகிய தேதி ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின்னர் ஜூலை 21,23,25 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.