விளையாட்டுத் துறையில் சிறந்து இயங்குபவர்களுக்காக இந்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் துரோணாச்சாரியா விருதுகளை வழங்கி வருகின்றது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்காக, பிசிசிஐ சார்பில் கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், மித்தாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதை தவிர, ஷிகர் தவான், ஜஸ்ப்ரித் பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோரது பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியின் பெயரும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுக்கு விண்ணபிக்க சில வழிமுறைகள் இருப்பதால், தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகிறது. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சுனில் சேத்ரியின் பெயரை பரிந்துரைத்துள்ளது. சுனில் சேத்ரியின் ஆவணங்கள் இன்னும் முழுதாகச் சமர்ப்பிக்கப்படவில்லை.
விளையாட்டு துறையைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், பாரா வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2016ம் ஆண்டில் 4 பேருக்கு கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன, அந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக பி.வி சிந்து, தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், ஜீத்து ராய் ஆகியோருக்கு ராஜீவ் காந்து கேல் ரத்னா விருது வழங்கப்பட்டன. அதுவே 2019-ம் ஆண்டில் வெறும் இரண்டு பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்றார்கள்.அதுவே 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக ஐந்து பேருக்கு வழங்கப்பட்டன.இதையடுத்து இந்த ஆண்டுக்கான விருதாளர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.