அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம்,  2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.


கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி வீட்டில் மாலை 5.30 மணி வரை 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது. இதே போல எஸ்.பி.வேலுமணியின் சகோதாரர் அன்பரசன் வீடு, கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் வீடு, வடவள்ளி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் நெஞ்சுவலி எனக்கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.




 


கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி. நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 7 மணியளவில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இந்த அலுவலகத்தில் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி. நிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுக்குமாடி கட்டிடத்தில் 3 தளங்களில் கே.சி.பி நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாக கே.சி.பி. இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்த்துள்ளனர். அதிகளவிலான டெண்டர்கள் விதிமுறைகளை மீறி முறைகேடாக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், எஸ்.பி.வேலுமணி அதிகார துஷ்ப்ரயோகம் செய்து இந்நிறுவனத்திற்கு டெண்டர்களை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.