இந்தியா அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது.


இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. பின்னர், 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் பந்திலே ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த கேப்டன் ஷிகர் தவாண் 46 ரன்களும், சாம்சன் 27 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்தபோது சாம்சன் ஆட்டமிழந்தார். அப்போது, ஐ.பி.எல். ஆட்டங்களிலும், ஒருநாள் தொடரிலும் அதிரடியாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.


ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் அணியின் ஸ்கோர்  113 ரன்னாக இருந்தபோது ஆட்டமிழந்தார். சற்று நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ரன்களை குவித்தார். ஹசரங்கா பந்தில் அரைசதத்தை பூர்த்தி செய்த சூர்யகுமார் யாதவ், அரைசதத்தை பூர்த்தி செய்த அடுத்த பந்திலே மென்டிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 15.2 ஓவர்களில் 127 ரன்களை எடுத்திருந்தது.






கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சூர்யகுமார் யாதவ் அவுட்டானபோது அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் முகபாவனையை தொலைக்காட்சியில் காட்டியதை  வீடியோவாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானபோது ராகுல் டிராவிட் மிகுந்த அதிருப்தி அடைந்தது அவரது முகபாவனையில் தெரிகிறது.


அரைசதம் அடித்த பந்திலே சூர்யகுமார் யாதவ் அவுட்டான காரணத்தால்தான் ராகுல்டிராவிட் அதிருப்தி அடைந்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூர்யகுமார் யாதவ் களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் இந்திய அணியின் ஸ்கோர் 180ஐ கடந்திருக்கும். இருப்பினும் கடைசி கட்டத்தில் 14 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் இஷான் கிஷான் குவித்த 20 ரன்களால் இந்திய அணி 164 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் புவனேஸ்குமார் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.