காமன்வெல்த் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இன்று கனடா நாட்டின் மிச்செல் லீ யுடன் மோதினர். காமன்வெல்த் வரலாற்றில் இதுவரை தங்கம் வெல்லாத பி.வி.சிந்து இந்த முறை தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பி.வி.சிந்து விருந்து படைக்கும் விதத்தில் ஆதிக்க ஆட்டத்தையே ஆரம்பம் முதல் ஆடினார்.






இந்த போட்டியில் முதல் செட்டில் பி.வி.சிந்து அபாரமாக ஆடி 21-15 என்று முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர், இரண்டாவது செட்டை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கனடா நாட்டு வீராங்கனை களமிறங்கினார். ஆனாலும், இந்த செட்டிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து இந்தியாவிற்காக தங்கத்தை வென்று அசத்தினார்.


காமன்வெல்த் வரலாற்றில் பி.வி.சிந்து வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். பி.வி.சிந்து 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். 2018ம் ஆண்டு வெண்கலகம் வென்றிருந்தார். இப்போது, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று காமன்வெல்த் வரலாற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.






கனடா வீராங்கனை மிட்செல் லீயுடன் மோதிய கடைசி 6 போட்டியிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியாவிற்கு பெருமை மேல் பெருமை தேடித்தந்துள்ள பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளியும், வெண்கலமும் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளார்.  ஆசிய போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். தற்போது, காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண