கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,22,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,50,000 கனஅடி நீர்வரத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடியும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 97,000 கன அடி என தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளது. இதனால் வினாடிக்கு 2 இலட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து வந்தது. தொடர்ந்து வினாடிக்கு 1,75,000 கன அடியாக குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் குறைந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,75,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 1,50,000 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் மேலும் மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தமிழகத்திற்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வினாடிக்கு 1,50,000 கன அடியாக தொடர்கிறது. தொடர்ந்து 7-வது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகள் என எதுவும் தெரியாத அளவிற்கு வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் 30 நாளாக சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து சற்று குறைந்ததால், ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி பகுதிகளில், குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் சற்று குறைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தேங்கிய தண்ணீரும் சற்று குறைந்துள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கன மழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த 20 நாட்களில் 80 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு 100 டிஎம்சி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்