PV Sindhu Wedding: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மணக்க இருப்பது யார் என்ற தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
பி.வி. சிந்துவிற்கு திருமணம்:
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு, வரும் டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை உதய்பூரில் வரும் 22ம் தேதி மணக்கிறார். ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றி, நீண்ட நாட்களாக வெற்றிக்காக ஏங்கி கிடந்த சிந்துவிற்கு கம்பேக் ஆக அமைந்துள்ளது.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
பி. வி. சிந்துவின் திருமணம் தொடர்பாக பேசிய அவரது தந்தை ரமணா, “இரண்டு குடும்பங்களும் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருந்தன. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்புதான் அனைத்தும் முடிவடைந்தன. ஜனவரி முதல் சிந்துவின் அட்டவணை பரபரப்பாக இருக்கும் என்பதால் இது மட்டுமே சாத்தியமான தேதி என்று" என்று தெரிவித்துள்ளார். அதனால்தான் டிசம்பர் 22-ம் தேதி திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் ரிசப்ஷன் நடைபெறவுள்ளது. அடுத்த சீசன் முக்கியமானதாக இருக்கும் என்பதால் விரைவில் பயிற்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் தொடர்பான நிகழ்வுகள் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கும்.
சாதனை மங்கை பி.வி. சிந்து
ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் தவிர, 2019 ஆம் ஆண்டு தங்கம் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக சிந்து கருதப்படுகிறார். ரியோ 2016 மற்றும் டோக்கியோ 2020 இல் அடுத்தடுத்து ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார். மேலும் உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 2017ம் ஆண்டு 2வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். சிந்து BWF உலக சுற்றுப்பயணத்தில் இரண்டு வருடமாக சாம்பியன் பட்டம் வென்றதே இல்லை என்ற வறட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கினார். பேட்மிண்டன் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ள பிவி சிந்து, BWF சூப்பர் 300 போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 21-12, 21-9 என்ற செட் கணக்கில் 17 வயது சகநாட்டவரான உன்னதி ஹூடாவை தோற்கடித்தார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 119-வது இடத்தில் உள்ள சீன மக்கள் குடியரசின் வு லுயோ யுவை எதிர்கொள்கிறார். BWF உலக சுற்றுப்பயணத்தில் இந்திய பேட்மிண்டன் வீரரின் கடைசியாக பட்டம் வென்றது ஜூலை 2022 இல் நடந்த சிங்கப்பூர் ஓபனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.