இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தாய்லாந்து நாட்டின் புஷ்னனை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியில் முதல் கேமில் பி.வி.சிந்து தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் ஒரு கட்டத்தில் இருவரும் 9-9 என சமனில் இருந்தனர். இருப்பினும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-16 என்ற கணக்கில் முதல் கேமை வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் பி.வி.சிந்து மிகவும் எளிதாக புள்ளிகளை குவித்து வந்தார்.
இறுதியில் 49 நிமிடங்களில் 21-16,21-8 என்ற கணக்கில் எளிதில் போட்டியை வென்றார். அத்துடன் ஸ்விஸ் 300 சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தையும் வென்று அசத்தினார். ஏற்கெனவே இந்தாண்டின் தொடக்கத்தில் சையத் மோடி தொடரை பி.வி.சிந்து வென்று இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இந்தாண்டு இரண்டாவது பட்டத்தை பி.வி.சிந்து வென்றுள்ளார். மேலும் தாய்லாந்து வீராங்கனை புஷ்னனிற்கு எதிராக இதுவரை பி.வி.சிந்து 16 முறை வென்றுள்ளார். புஷ்னன் ஒரு முறை மட்டுமே பி.வி.சிந்துவை வீழ்த்தியுள்ளார்.
ஸ்விஸ் ஓபன் சூப்பர் சீரிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் இறுதிப் போட்டியில் விளையாடினார். அவர் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்டி 21-12, 21-18 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதன்காரணமாக பிரணாய் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்