ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது ஆட்டம் மும்பை, வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, ஆட்டத்தை கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். மயங்க் அகர்வால் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.


இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயிலும், கே.எல்.ராகுலும் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். கிறிஸ் கெயில் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களில் ரியான் பராக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, களமிறங்கிய தீபக் ஹூடாவும், கே.எல்.ராகுலுடன் இணைந்து அணியின் ரன் ரேட் குறையாத வகையில் பார்த்துக்கொண்டார். இறங்கியது முதல் ருத்ரதாண்டவம் ஆடிய தீபக் ஹூடா சிக்ஸர்கையும், பவுண்டரிகளையும் மைதானத்தின் அனைத்து பக்கமும் பறக்கவிட்டார்.  




அவர் வெறும் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், பூரன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற கே.எல்.ராகுலின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 91 ரன்களுடன் 5வது விக்கெட்டாக வெளியேறினார்.


இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.