புதுச்சேரி : சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த புதுச்சேரி மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Continues below advertisement

ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம்

புதுச்சேரியின் காரைக்கால் அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் - கீதாமணி மகள் ஜனனிகா. இவர் தருமபுரம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பேட்மிண்டனில் ஆர்வம் கொண்ட மாணவி ஜனனிகா, தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து வெற்றி பெற்றார்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் வரவேற்பு

இதனை தொடர்ந்து, தென் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டியிலும், ஐதராபாத்தை அடுத்த பஞ்ச்குலா மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்திந்திய அளவிலான இரு பாலருக்கான பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றார். இதன் மூலம், சீனாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வானார். இதில் விளையாடிய மாணவி ஜனனிகா வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார். பதக்கத்தை வென்ற மாணவி ஜனனிகா காரைக்கால் வந்தார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் மாணவி ஜனனிகாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Continues below advertisement

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன்  தலைமையில் மாணவி ஜனனிகாவிற்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து வரவேற்பை அளிக்கப்பட்டதுடன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். வட்டாட்சியர் செல்லமுத்து, காரைக்கால் மேல்நிலைக்கல்வி துணை இயக்குநர் ஜெயா, காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார்கள், மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மாணவி ஜனனிகாவிற்கு மாலைகள், சால்வை அணிவித்தும் மலர் தூவி செண்டை மேளம் முழங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பாராட்டு விழாவில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, காரைக்கால் சார்பு ஆட்சியர் எம். பூஜா, காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை துணை இயக்குனர் முனைவர் குலசேகரன் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து சென்றால் நிச்சயம் வெற்றி

இதனைத் தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவி ஜனனிகா செய்தியாளர்களிடம் பேசியதாவது: -

எனது வெற்றிக்கு முழு காரணமான பயிற்சியாளர் தக்ஷிணாமூர்த்தி, பெற்றோர்,என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது மூத்த வீரர்களின் ஒத்துழைப்போடு, பள்ளி முதல்வர் சித்ரா கிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலர்களால் என்னால் வெற்றிபெற முடிந்தது. புதுச்சேரிக்கு என்று பிரத்தியேகமாக அசோசியேஷன் அமைக்க வேண்டும். அசோசியேஷன் இல்லாததால் எங்களால் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே அசோசியேஷன் அமைத்து போதிய உதவிகளை புதுச்சேரி அரசு செய்து தர வேண்டும்.

அரசு அனைத்து உதவிகளையும் செய்தால் என்னைப் போன்ற பல வீரர்கள் வெளியே வருவார்கள். இந்தியாவிற்காக தொடர்ந்து நான் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை எனது கனவு. மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என மாணவி ஜனனிகா தெரிவித்தார்.