Pro Kabaddi 2022: இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இன்று  தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கும் இந்தத் தொடர் இன்று முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர். 


இந்நிலையில் முதல் நாளான இன்று  மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் தபாங் டெல்லி யு மும்பா அணியை எதிர்த்து 7.30 மணிக்கு  விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இரவு 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மூன்றாவது போட்டியில் முதல் சீசன் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணி உபி யோதா அணியை எதிர்த்து இரவு 9.30 மணிக்கு விளையாட உள்ளது.  


இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு அணியான  தமிழ் தலைவாஸ் வரும் 8ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை ப்ரோ கபடி லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை தபாங் டெல்லி அணி வென்றது. கடந்த முறை ப்ரோ கபடி லீக் தொடர் பயோபபுள் முறையில் பெங்களூருவில் மட்டும் நடைபெற்றது. 






ஆனால் இம்முறை ப்ரோ கபடி லீக் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முதல் பாதி பெங்களூருவிலும், இரண்டாவது பாதி புனேவிலும் நடைபெற உள்ளது. அதன்பின்னர் இறுதி கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளன. இம்முறை ஏலம் நடைபெற்று பல்வேறு அணிகளில் வீரர்கள் மாறியுள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  


தற்போது வரை நடைபெற்றுள்ள 8 ப்ரோ கபடி லீக் தொடரில் பிரதீப் நர்வால் அதிகபட்சமாக 1318 ரெய்டு புள்ளிகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மணிந்தர் சிங் 993 ரெய்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் அதிக டாக்கில் புள்ளிகள் பட்டியலில் 374 டாக்கில் புள்ளிகள் பெற்று மஞ்சீத் சில்லர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஈரான் வீரர் ஃபைசல் அட்ரசல்லி 345 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.