ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 34வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் இன்று (டிசம்பர் 22ம் தேதி) பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.


தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் கடந்த போட்டிகளில் எப்படி..?


கடந்த டிசம்பர் 17 ம் தேதி யு மும்பாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில்  33-46 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியின் இரண்டாவது தோல்வியாகும்.


அதேபோல், கடந்த டிசம்பர் 17ம் தேதி  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாட்னா பைரேட்ஸ் 28-29 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் இதுவரை நேருக்கு நேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பாட்னா பைரேட்ஸ் 6 முறையும், தமிழ் தலைவாஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் டையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அதேநேரத்தில் ப்ரோ கபடி லீக் சீசன் 9 இல் கடைசியாக தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய போட்டியானது 33-33 என டையில் முடிந்தது.


ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் பதினொன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 2 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்து 10 புள்ளிகளை குவித்துள்ளது.


இதற்கிடையில் பாட்னா பைரேட்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசனில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. 


தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் முன்னணி வீரர்கள் யார் யார்?


தமிழ் தலைவாஸ்:


ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் 4 போட்டிகளில் 38 ரெய்டு புள்ளிகளை குவித்த நரேந்தர் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் முதன்மை ரெய்டராக உள்ளார்.  தொடர்ந்து 4 ஆட்டங்களில் 17 டிபெண்ட் புள்ளிகளை குவித்த சாஹில் குலியா எதிரணிகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துகிறார். 


பாட்னா பைரேட்ஸ்: 


ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக சச்சின் டாப் ரைடராக இருந்து வருகிறார். இவர் இந்த சீசனில் 5 போட்டிகளில் 11 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகள் உட்பட 51 ரெய்டு புள்ளிகளை தனது அணிக்காக பெற்றுள்ளார். 


மேலும், பாட்னா அணி வீரர் க்ரிஷன் இதுவரை 5 போட்டிகளில் 14 டிஃபெண்ட் புள்ளிகளைப் பெற்று, அணியில் சிறந்த டிஃபெண்டராக உள்ளார். அதேசமயம் பாட்னா பைரேட்ஸ் அணியில் அங்கித் 5 ஆட்டங்களில் 12 புள்ளிகளைப் பெற்று சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.


பப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?


ப்ரோ கபடி சீசன் 10-ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்-பில் இலவசமாக கண்டுகளிக்கலாம்.