ப்ரோ கபடி லீக் சீசன் 10இன் 16வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் இன்று தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.


கடந்த டிசம்பர் 3ம் தேதி நடந்த கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-31 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி கேசிக்கு எதிராக வென்றது. மறுபுறம், பெங்கால் வாரியர்ஸ் கடந்த டிசம்பர் 7ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் டையில் ஈடுபட்டது.






பெங்கால் வாரியர்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் நேருக்கு நேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில், தமிழ் தலைவாஸுக்கு எதிரான 9 வெற்றிகளை பெற்று பெங்கால் வாரியர்ஸ் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ் தலைவாஸ் 2 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது.


பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி ஆட்டத்தில் 35-30 என்ற கணக்கில் பெங்கால் வாரியஸ் வெற்றி பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் 1 வெற்றி, 1 டை மற்றும் 0 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் பிகேஎல் 10 புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம், தமிழ் தலைவாஸ் 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ஒரே போட்டியில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் ஒரே வெற்றியுடன், தோல்வியடையாத அணியாக வலம் வருகிறது. 


பெங்கால் வாரியர்ஸ் vs தமிழ் தலைவாஸ் சிறந்த வீரர்கள்:


பெங்கால் வாரியர்ஸ்:


2 போட்டிகளில் 14 ரெய்டு புள்ளிகளை குவித்து ரெய்டர் மணிந்தர் சிங் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் தனது கடைசி போட்டியில் 4 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார். இதற்கிடையில், பெங்கால் வாரியர்ஸின் டிபெண்டிங்கில் வைபவ் கார்ஜே சுமையை தாங்குகிறார். இவர் ப்ரோ கபடி லீக் 10ல் 2 போட்டிகளில் 5 டிபெண்ட்ஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.


தமிழ் தலைவாஸ்:


ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி ரைடராக அஜிங்க்யா பவார் திகழ்ந்து வருகிறார். இவர் இதுவரை 1 போட்டியில் மட்டுமே களமிறங்கி 2 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகள் உட்பட 18 ரெய்டு புள்ளிகளை குவித்தார்.


சாஹில் குலியா தமிழ் தலைவாஸ் அணிக்கு டிபெண்ட்ஸில் தலைமை தாங்கி 1 போட்டியில் 2 டிபென்ட்ஸ் புள்ளிகளை பெற்றுள்ளார். இதற்கிடையில், ஹிமான்ஷு 1 போட்டியில் 2 புள்ளிகளுடன் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார்.


படைக்கவிருக்கும் மைல்கற்கள்:


பெங்கால் வாரியர்ஸின் சுபம் ஷிண்டே 100 டிபெண்ட்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 7 டிபெண்ட்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல், பெங்கால் வாரியர்ஸ் அணியில் உள்ள நிதின் ராவல் 100 டிபெண்ட்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 6 டிபெண்ட்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.


புரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?


ப்ரோ கபடி சீசன் 10 ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவியிலும், Disney+Hotstar மொபைல் ஆப்-களிலும் இலவசமாகவும் கண்டு களிக்கலாம்.