ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்குத் தொடர்பாக, துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே லுக் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தில் அவரை பிடித்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஆஜராகவே வந்திருப்பதாக ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் அளித்த உறுதியை ஏற்று விமான நிலைத்தில் இருந்து வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். 


முன்னதாக, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷ், டிசம்பர் 12-ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆருத்ரா கோல்டு நிறுவனம்,சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.


இவ்வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதனடிப்படையில், உரிய ஆவணங்களுடன்,  போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.


இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கிடையே, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தனக்கெதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, மனைவியின் சிகிச்சைக்காக துபாயில் இருப்பதாகவும், டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை திரும்புவதாகவும் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் டிசம்பர் 12-ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்ததடைந்த ஆர்.கே. சுரேஷிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 


மேலும் படிக்க 


ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!


UP Accident: லாரி மீது கார் மோதி விபத்து - தீயில் கருகி 8 பேர் உயிரிழப்பு! உ.பி.யில் பயங்கர சோகம்!