ப்ரோ கபடியின் 10வது சீசன் (பிகேஎல் 10) தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தநிலையில், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக பங்கேற்கும் அணிகள் அடுத்தடுத்து புதிய அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. 


அந்த வகையில், ப்ரோ கபடி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் தபாங் டெல்லி அணி தங்களது அணியின் மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, ஜோகிந்தர் நர்வால் மீண்டும் டெல்லி அணியில் இணைந்துள்ளார். என்ன இந்த ஆண்டு ஒரு வீரராக இல்லாமல், உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து தபாங் டெல்லி கேசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை ஆனந்த கடலில் கூத்தாட செய்துள்ளது. 


2023 ப்ரோ கபடி ஏலத்திற்கு முன்பாக, தபாங் டெல்லி கேசி அணி தலைமை பயிற்சியாளராக ராம்பீர் சிங் கோகரையும், உதவிப் பயிற்சியாளராக அஜய் தாக்கூரையும் நியமித்தது. இந்த சூழலில்தான், சில நாட்களுக்கு முன்பு அஜய் தாக்கூர் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லி அணியில் அஜய்க்கு பதிலாக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. 






இதை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது டெல்லி இந்த வாய்ப்பை முன்னாள் கேப்டனான ஜோகிந்தர் நர்வாலுக்கு அளித்துள்ளது. ஏற்கனவே, தபாங் டெல்லி உடனான ஜோகிந்தர் நர்வாலின் பயணம் மறக்கமுடியாததாக இருந்தது. ஜோகிந்தர் நர்வாலின் தலைமையின் கீழ், டெல்லி அணி முதல் முறையாக சீசன் 6ல் பிளே- ஆஃப்க்கு சென்றது. அதனை தொடர்ந்து, சீசன் 7ல் முதல் முறையா இறுதிப்போட்டி வரையும், சீசன் 8ல் இவரது தலைமையின் கீழ் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 


இதற்கிடையில், கடந்த சீசனில் டெல்லி அணி, ஜோகிந்தர் நர்வாலை விடுவித்தது. அதன்பிறகு, அங்கிருந்து நர்வால் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த நேரத்தில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டு பல போட்டிகளில் விளையாடமால் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இந்த சீசனின் ஏலத்திற்கு முன்பே தனது ஓய்வை அறிவித்திருந்தார். 


தற்போது  டெல்லி அவரை மீண்டும் ஒரு உதவி பயிற்சியாளராக ஆக்கி இந்த லீக்கின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது.


தபாங் டெல்லி கேசி அணிக்கு யார் கேப்டன்..? 


ப்ரோ கபடி 2023க்கான கேப்டன் மற்றும் துணை கேப்டனையும் தபாங் டெல்லி கேசி அறிவித்துள்ளது. மீண்டும் நவீன் குமார் அணிக்கு கேப்டனாகவும், விஷால் பரத்வாஜ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நவீன் குமார் தலைமையிலான டெல்லி அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது, ஆனால் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது.


வரவிருக்கும் சீசனில் டெல்லி அணி சாம்பியனாக்க கேப்டன் நவீன் குமார் மற்றும் ஜோகிந்தர் ஜோடி சிறப்பாக செயல்படுவார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள். ப்ரோ கபடி 10வது சீசனில் டெல்லி அணி தனது முதல் போட்டியில் வருகின்ற டிசம்பர் 3ம் தேதி தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது.