Pro Kabaddi 2022: Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில், முதலாவதாக பலமான பெங்கால் வாரியர்ஸ் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.
பெங்கால் வாரியர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
நேற்று போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக வழக்கம்போல் நடைபெறும் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. அதில் முதலாவது போட்டியாக பெங்கால் வாரியர்ஸ் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதிக்கொள்வதற்கு முன்னதாக போட்டியை பலமான பெங்கால் வாரியர்ஸ் அணி வெல்லும் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டியை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வென்றது. குறிப்பாக ஜெய்ப்பூர் அணி பெங்கால் அணியை 39 - 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி 4 வெற்றி 21 புள்ளிகள் என அட்டவணையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தெலுகு டைட்டன்ஸ் vs புனேரி பல்டன்
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன் அணியும் புனேரி பல்டன் அணியும் பலப் பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே மிகவும் பரபப்பாக சென்று கொண்டு இருந்த இந்த போட்டியினை யார் வெல்லுவார்கள் என்பதே கணிக்க முடியாமல் இருந்தது. ஒவ்வொரு ரைடுக்கும் அணிகளின் புள்ளி என்பது சரிசமமாகவே சென்றுகொண்டு இருந்தது. பரபரப்பின் உச்சம் தொற்றிக்கொண்ட இந்த போட்டியின் இறுதியில் 25 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் முடிந்த இந்த போட்டியில் புனேரி பல்டன் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ்
நடைபெற்று வந்த ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசனில் இன்று குஜராத் ஜெய்ண்ட்ஸ் மற்றும் யுபி யோதாஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.