Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியை 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி டேபிள் டாப்பராகியுள்ளது. 


 இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் நேற்று முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.


இந்த சீசனில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தது. முதலில் மாலை 7.30 மணிக்கு நடந்த போட்டியில் யு மும்பா அணியும் யுபி யோதாஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டன. 


யு மும்பா vs  யுபி யோதாஸ்






மாலை 7.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் யு மும்பா அணியும் யுபி யோதாஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கிட்டதட்ட சரிசமமான புள்ளிகளுடன் இருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாதியில் யு மும்பா அணியின் கை ஓங்க ஆரம்பித்து ஆட்டமும் யு  மும்பா அணிக்கு சாதகமாக முடிந்தது. போட்டியின் முடிவில் யு மும்பா அணி யுபி யோதாஸ் அணியை 30 - 23 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.


டெல்லி தபாங் vs  குஜராத் ஜெயிண்ட்ஸ்


நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பலமான டெல்லி தபாங் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் கையே ஓங்கி இருந்தது. போட்டியின் முடிவில் டெல்லி தபாங் அணி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 53 - 33 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. 20 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியதால் டெல்லி அணி டேபிள் டாப்பராக உயர்ந்துள்ளது.