பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 20 போட்டியாளர்கள் இருக்குற இந்த வீட்டுல ஓரளவுக்கு எல்லாரும் பரீட்சையம் ஆகிட்டாங்க. அதனால் இனி பஞ்சாயத்தை கூட்ட வேண்டியது தான் என பிக்பாஸ் முடிவு பண்ணிட்டாரு போல. ஆரம்பமே அமர்களமான டாஸ்க் ஒன்றை வழங்கினார்.


ஆரம்பமே ரணகளம்




அதன்படி போட்டியாளர்கள் தங்களை மிகவும் குறைவாக கவர்ந்த 2 பேரை காரணத்தை சொல்ல வேண்டும். இறுதியாக குறைவாக ஓட்டுகள் வாங்கிய 4 பேர் வீட்டின் வெளியே தான் தங்க வேண்டும். டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் செய்யும் நேரம் தவிர்த்து கார்டன் ஏரியாவில் தான் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட, தூங்க அனுமதி இல்லை. 


இந்த 4 பேரும் அடுத்த வாரம் நடக்கவுள்ள நேரடி வெளியேற்றம் செய்யப்படக்கூடிய நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கை ஜனனி கொஞ்சும் இலங்கை தமிழில் பேச, யாருக்கு எல்லாம் புரியல என கேட்கப்பட்டது. இதில் சில பேர் எனக்கு புரியல என சொல்ல ஜிபி முத்துவும் புரியல என கை தூக்கியது அல்டிமேட் காட்சியாக அமைந்தது. 


இந்த டாஸ்கில் விக்ரமன், குயின்ஸி, ஜனனி, நிவாசினி தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியே போடப்பட்டிருந்த வாழைப்பழ பெட்டில் இருக்குமாறும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வெளியே தங்க அதிகாலை ஆகியும் போட்டியாளர்கள் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் ஜனனி விதிகளை மீறி வீட்டுக்குள் சாப்பிட்டு கொண்டிருந்தார்.


ஜிபி முத்துவை சீண்டிய ராபர்ட் மாஸ்டர்




அதிகாலை 4.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த ஜிபி முத்துவை ராபர்ட் மாஸ்டர் காலில் சொறிந்து தூக்கத்தைக் கலைக்க அவர் கீழே விழுந்தார்..(சிங்கத்தின் குணம் தெரியாமல் சீண்டிப்பார்ப்பதாக பலரும் ஜிபி முத்துவுக்கு ஆதரவாக இந்த வீடியோவை வைரல் செய்திருந்தனர்)


பொழுது விடிந்தது. கேமரா  முன்னால் குயின்ஸி வீட்டுக்குள் போய் டிரெஸ் மாத்த அனுமதிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார். 10 மணி ஆனது. எங்க ஏரியா உள்ள வராத பாடலோடு முதல் நாள் ஆரம்பித்தது. ஜிபி முத்து டான்ஸில் பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். அனைவரின் கவனமும் அவர் மேல் குவிந்தது. இந்த கேப்பில் 19 போட்டியாளர்களும் ஆடி முடித்து வெளியே வர அஸீம் மெதுவாக எழுந்து பாட்டு போட்டார்களா என கேட்டார்.


ஜனனி வெளியே படுப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். காலை 10.40க்கு மீண்டும் டிபன், சாப்பாடு வந்தது. நெத்திச்சூட்டி, கம்மல் என சந்திரமுகி ஜோதிகா பாணியில் பொடி தோசை, பொங்கல் என ரக்‌ஷிதா புலம்பி கொண்டிருந்தார்.  வெளியே இருந்த 4 போட்டியாளர்களை உள்ளே வந்து சாப்பிட்டு எடுத்து விட்டு போகலாம் என சக போட்டியாளர்கள் ரூல்ஸை தப்பா சொல்ல தடபுடலாக விருந்து நடந்தது. ஆனால் விக்ரமன், குயின்ஸி இருவர் மட்டும் ரூல்ஸ்படி வெளியே வந்து சாப்பிட்டனர். 


முதல் நாளே மன்னித்த பிக்பாஸ்


இதனைத் தொடர்ந்து மீண்டும் அனைவரும் ஒன்று கூட பிக்பாஸ் ரூல்ஸ் மீறிய 4 பேரை கடுமையாக கண்டித்தார். அவரவர் பெட்டிகள் உள்ளே வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து இம்முறை புதிய விதிமுறை வந்தது. அதற்காக ஒரு வீடியோ ஒளிபரப்பானது. வாரத்திற்கான டாஸ்க், லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க் என இரு டாஸ்க்குகள், தனி தனி பாய்ண்டுகள், தனி தனி விருப்பப்பட்ட சாப்பாடு என சொல்லப்பட்டது. இதனை முன்னாள் போட்டியாளர்கள் தெரிவித்தனர். 


அடுத்த லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க் என்னவென்று சொல்லப்பட்டது. “எங்க பஸ்ஸர் இருக்கோ அங்க பிரஷ்ஷர் இருக்கு” என சொல்லிவிட்டு வீட்டின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட பஸ்ஸர்கள் ஒலிக்க தொடங்கும் போது அதனை நிறுத்த வேண்டும். அப்போது வீட்டின் நடுவே குப்பை கொட்டப்படும். இது தனி பாய்ண்டுகள் அளிக்கப்படும் என்பதால் யார் அதிக பாய்ண்டுகள் பெறுவது முக்கியம் என தெரிவிக்கப்பட்டது. 


முதல் பஸ்ஸரை மகேஸ்வரி நிறுத்த 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த பஸ்ஸர் அடிக்க ராம் ராமசாமி, மணிகண்ட ராஜேஷூம் அதனை அணைக்கப் போய் உடைந்தது. ஆனால் இம்முறை ஜெயித்தது அமுதவாணன். நடுவில் மதியம் ஜிபி முத்து தூங்க நாய் குரைத்தது. இதைப் பார்த்து அவர் பயந்தது சிரிப்பலையை வரவைத்தது. 


மழை பெய்ய அதில் நனைந்த ஜிபி முத்து ஆசையை காத்துல தூதுவிட்டு பாடலுக்கு அட்டகாசமாக நடனமாட அதனை பாடி அமுதவாணன் கிண்டலடித்தார். தொடர்ந்து நேத்து ராத்திரி பாடலுக்கு ஜிபி முத்துவுடன் இணைந்து தனலட்சுமி ஆட்டம் போட்டார். 


அணி பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் 




அடுத்ததாக வார டாஸ்க் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் கிளப் ஹவுஸ் ஆக மாறி ஒரு அணியை மற்ற அணியினர் கண்காணிக்க வேண்டும். டெமோ டெஸ்ட் முடிந்தவுடன் அதனைப் பொறுத்து கிளப் ஹவுஸ் ஓனர் (கேப்டன்) தேர்வு செய்யப்படுவார். பாத்திரம் கழுவுதல் அணியில் தனலட்சுமி, ஜிபி முத்து, மணி, ஆயிஷா, ஜனனி இடம் பெற்றனர். 


ஹவுஸ் கிளீனிங் டீமில் அஸீம், அசல், கதிரவன், குயின்ஸி, ஷெரினா ஆகியோரும், பாத்ரூம் கிளினீங் டீமில் ராம், நிவா, அமுதவாணன், ராபர்ட், ரக்‌ஷிதா ஆகியோரும், சமையல் அணியில் விக்ரமன், ஷிவின், தினேஷ் கனகரத்தினம், மகேஸ்வரி, சாந்தி அரவிந்த் ஆகியோரும் இடம் பெற்றனர்.


தொடங்கியது இந்த வார டாஸ்க்


முதல் டெமோ டாஸ்க் சமையல் டீமுக்கு நடந்தது. அவர்களுக்கு 5 கேள்விகள் கேட்கப்பட்டது. விக்ரமனிடம் 5 பருப்பு பெயர்களும், சாந்தியிடம் உப்புமா செய்முறையும், தினேஷிடம் புழுங்கல் அரிசி சாதம் சமைக்க எத்தனை விசில் தேவைப்படும் என்றும், ஷிவினிடம் ரசம் செய்முறையும், மகேஸ்வரியிடம் சாம்பார் செய்முறை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. பின் முன்னால் இருந்த உணவுப் பொருளை என்னவென்று சொல்ல வேண்டும் என சொல்லப்பட்டது. இதில் விக்ரமன், சாந்தி, மகேஸ்வரி சரியான பதில் அளித்தனர். 


அடுத்த டாஸ்க் பாத்ரூம் டீமுக்கு வைக்கப்பட்டது. ஒரு டப்பில் நடுவில் மார்க் போடப்பட்டு அது வரை தண்ணீர் நிரப்பபட்டு அதனை தயிர் கடையும் மத்தை கொண்டு ஒற்றைக்கையால் பிடிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் தண்ணீர் கீழே கொட்டியது. 


அடுத்த ஒரு வாளி தண்ணீரில் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. இதில் ஜிபி முத்து குக்கரோடு மல்லுக்கட்டி கொண்டிருந்தார். இதில் வாளி தண்ணீரை சோப்பு நீராக மாற்றியதாக தனலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட அவர் மறுத்தார். இறுதியாக ஜனனி இந்த டீமின் ஓனராக தேர்வு செய்யப்பட்டதோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.