இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி வென்றுள்ளார்.


ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கணை என்ற சாதனையை பெற்றுள்ளார். இந்த போட்டியில் வைஷாலி 2500 புள்ளிகளை கடந்ததன் மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது வீராங்கணையாக சாதனையை படைத்துள்ளார். 


இதனிடையே விஷாலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.



உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து, #கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி-சகோதரர் இணையர் என்ற சிறப்பை பெற்று நீங்கள் வரலாறு படைத்தீர்கள். இப்போது மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நீங்கள் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற உடன்பிறப்புகளாக மாறியுள்ளீர்கள்.  உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.  உங்கள் குறிப்பிடத்தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நமது மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 


இவர் பெண்கள் தரவரிசையில் உலகளவில் 11வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார். இதன்மூலம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் செஸ் உலகக்கோப்பை தொடரில் அவர் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக வைஷாலி 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் 2016 முதல் இவர் சர்வதேச பெண் செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார். 


இன்று பிரக்ஞானந்தா மிகப்பெரிய அளவில் புகழ்பெற காரணமே வைஷாலி தான். அக்கா செஸ் ஆடுவதை பார்த்து தான் 4 வயதில் பிரக்ஞானந்தா செஸ் ஆடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.