இன்று டி20 போட்டிகளில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கும் கிரிக்கெட்டை பார்க்கும் தலைமுறைக்கு, அதன் காட்ஃபாதர் யாருன்னு தெரியுமா ? இலங்கை அணியில் பந்து வீச்சாளராக உள்ளே நுழைந்து, பின்னாளில் இதுவரை உலகமே காணாத சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தான். ஒருநாள் போட்டியை எப்படி ஆட வேண்டும், துவக்க ஆட்டகாரர்கள் என்றால் துவக்கத்தில் விக்கெட் விழாமல் விளையாடுவது மட்டும் அவர்களது பணியில்லை, பவர் பிளேயை பயன்படுத்தி பந்துகளை அடித்து துரத்தி வெளியே அனுப்புவது, வேகமாக ரன்களை சேர்த்து தொடக்கத்திலேயே எதிரணியை திக்குமுக்காட வைப்பது என ஓபனிங் பேட்ஸ்மேன் ரோலில் புதிய ஃபார்முலாவை உருவாக்கியவரும் ஜெயசூர்யாதான்.



பேட்டிங் - பவுலிங் இரண்டிலும் டாப்


இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 445 ஒரு நாள் போட்டிகள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயசூர்யா சுமார் 20,852 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 13, 430 ரன்களை குவித்துள்ளார் ஜெயசூர்யா, ஆல் டைம் லிஸ்டில் 4வது அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.


சரி பேட்டிங்கில் இப்படி என்றால், பவுலிங்கில் ’கோல்டன் ஆர்ம்’ என ஒரு சொல்லை பயன்படுத்துவார்கள், முக்கியமான தருணங்களில் எதிர் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்தும் நபரை அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம், அதிலும் ஜெயசூர்யா கில்லாடி. தனது சுழலால் 421 விக்கெட்களை வீழ்த்தி சாய்த்துள்ளார் இவர்.



இந்தியாவுடன் ஜெயசூர்யா செய்த சில தரமான நினைவுகள்


1997இல் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜெயசூர்யா செய்த சம்பவத்தை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 537 என்ற கஷ்டமான ஸ்கோரை பதிவு செய்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. இலங்கையின் நிலை அவ்வளவுதான் என ரசிகர்கள் நினைக்க தொடங்கிய தருணத்தில், உள்ளே நுழைந்தார் சனத் ஜெயசூர்யா. ஆட்டத்தின் போக்கு அப்படியே மாறியது. இறுதியில் 952 ரன்களை குவித்தது இலங்கை அணி, அதில் ஒற்றை ஆளாக நின்ற ஜெயசூர்யா 340 ரன்களை விளாசினார்.


மேலும் 2000ம் ஆண்டில் சார்ஜாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறி கொண்டிருக்க, சோலோவாக 189 ரன்களை விளாசினார் ஜெயசூர்யா. ஒருநாள் போட்டிகளில் சென்சுரி என்பதே மிக அபூர்வம் என்ற காலகட்டம் அது, ஆனால் அன்றே டபுள் சென்சுரி அருகே நெருங்கி இந்திய அணியை ஆட்டம் காண வைத்தார் ஜெயசூர்யா. இறுதியில் 245 ரன்களில் வித்யாசத்தில் தனது மோசமான தோல்வியை சந்தித்தது இந்திய அணி.


இப்படி ஜெயசூர்யாவின் கிரிக்கெட் அதிரடியை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று வார்னர், ஜேசன் ராய், ரோகித் சர்மா போன்ற பல அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் கிரிக்கெட் களத்தில் வலம் வரலாம், ஆனால் அதற்கான விதை ஜெயசூர்யா போட்டது என்றால் அது மிகையாகாது.