வருடம் 1985, தனது 18 வயதில் முதல் சர்வதேச பாக்சிங் மேடை ஏறுகிறான் அந்த இளைஞன். எதிராளி போர்டாரிக்கோவின் ஹெக்டர் மெர்சிடிஸுக்கு அது நான்காவது மேட்ச். போட்டி தொடங்குகிறது, சீனியர் என்றும் பாராமல் ஹெக்டரின் மீது கருணையின்றிச் சீறிப் பாய்ந்தது அந்த இளைஞனின் குத்துகள். முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றான் அந்த இளைஞன். அதற்குப் பிறகான ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியிலும் எதிராளிகள் நாக் அவுட் ஆவது அவன் மேடையேறும் போட்டிகளின் எழுதப்படாத விதியானது.





இப்படியாக ஐம்பது மேடைகளை வெறிகொண்டுப் பந்தாடிய அந்த வேங்கையின் பெயர் மைக் டைசன்.  மரண அடி மைக் டைசன் குத்துச்சண்டை மேடைகளின் கெட்ட மனிதரானது இப்படித்தான்.  12 வயதில் பிக்பாக்கெட், கொள்ளை, அடிதடி, போதை என பட்டியலில் உள்ள குற்றங்கள் அத்தனையும் செய்து ஐம்பது முறைக்கு மேல் கைது செய்யப்பட்டு  சின்னபின்னமாகி சீர்திருத்தப் பள்ளியில் கிடந்த சிறுவன் டைசனை குத்துச்சண்டை மேடைக்கு அழைத்து வந்தார் சக வீரர் பாபி ஸ்டீவார்ட்.  


குற்றவாளி ஸ்போர்ட்ஸ் பெர்சனாக மாறினார். ஆனால் குற்றங்கள் நின்றபாடில்லை. வருடம் 1991 மாடல் அழகி கொடுத்த பாலியல் புகாரில் கைதானார், மூன்று வருடங்கள் சிறை சென்றார்.தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் 1997ல் மேடையேறினார் டைசன். எதிராளி எவாண்டர் ஹோலிஃபீல்ட் ஏற்கெனவே ஒருமுறை டைசனைத் தோற்கடித்தவர். தனது தோல்வியைத் திருப்பிக் கொடுக்க மேடையேறிய டைசன் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவோம் என்கிற ஆத்திரத்தில் ஹோலிஃபீல்டின் காதைக் கடித்தார்.




ஒருமுறைக் கடித்ததிலேயே வலது காது பிய்த்தெறியப்பட்டு ரத்தக்கிளறியில் கிடந்தார் ஹோலிஃபீல்ட்.  குத்துச்சண்டை வரலாற்றில் அதுவரை இல்லாத வகையாக முதன்முறையாக ஒரு போட்டியே செல்லாததாக அறிவிக்கப்பட்டது. டைசனுக்கு 3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.  சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவருடம் கழித்து அவரது உரிமம் திருப்பி அளிக்கப்பட்டாலும் காது விவகாரம் அவரை விடாது கருப்பாக வாழ்நாளுக்கும் துரத்தியது. குத்துச்சண்டை போட்டிகளில் மட்டும் சுமார் 300 மில்லியன் டாலர் வரைச் சம்பாதித்த சாம்பியன் கடன்மேல் கடன் குவிய 2003 தனது சொத்துகள் திவாலானதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  




2021ல் டைசனை மையமாக வைத்து ’தி நாக் அவுட்’ என்ற ஆவணப்படம் வெளியானது. அதில்,’சிறுவயது டைசனிடம் நீங்கள் என்ன அறிவுரை சொல்வீர்கள்?’ என டைசனிடம் கேட்கிறார் ஒரு பத்திரிகையாளர்.
அதற்கு டைசன்,’வாழ்க்கை கடினமாக இருக்கும். மிகக் கடினமாக இருக்கும்’ எனச் சொல்வேன் என்கிறார் டைசன்.





முழுக்க முழுக்க தவறுகளால் மட்டுமே தன் வாழ்க்கையை எழுதிவந்த டைசன் தற்போது தன்னை போன்று இளவயதைத் தொலைத்த இளைஞர்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தின் இடதுபக்கத்தில் உள்ள வாரியர் டாட்டூதான் டைசனின் அடையாளம். கடவுள் பாதி மிருகம் பாதி எனத் தனக்குள் இருக்கும் சாத்தானுக்கும் தேவனுக்கும் இடையே விடாப்பிடியாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் வாழ்நாள் சாம்பியன் தான் இந்த மைக் டைசன்.

Also Read : ”காவலர்கள் மனித உரிமை மீறாத வகையில் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்” - டிஜிபி சைலேந்திரபாபு