கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை அணிக்கு ஓப்பனிங் இறங்கும் டூபிளசிஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதால், கெய்க்வாடோடு யார் ஓப்பனிங் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நடந்து மும்பைக்கு எதிரான போட்டியில், 218 ரன்கள் அடித்தும் தோல்வியைத் தழுவியதற்கு பதலடி கொடுக்க சென்னை அணி காத்திருக்கிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அரை சதம் கடந்த டூபிளெசிஸ் இம்முறை அணியில் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஐபிஎல் 2021 தொடரில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள டூபிளெசிஸ், 320 ரன்கள் அடித்து, 64 சராசரி, 145.45 ஸ்ட்ரைக் ரேட்டோடு ஃபார்மில் இருந்தார். காயம் சரியாகி எப்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், தோனி தலைமையிலான சிஎஸ்கே, கெய்க்வாடோடு யாரை ஓப்பனிங் களமிறக்கப்போகிறார்கள், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்போம். 

ராபின் உத்தப்பா

ஐபிஎல் தொடரில், 2000-க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ள உத்தப்பா ஓப்பனிங் களமிறக்கப்படலாம். சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டு இன்னும் வாய்ப்பு அளிக்கப்படாமல் வைத்திருக்கும் உத்தப்பாவை சென்னை அணி இம்முறை பயன்படுத்தலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஓப்பனிங் களமிறங்கியபோது அதிரடிகளை காட்டிய உத்தப்பா, சென்னை அணியின் ஓப்பனிங்கிற்கும் செட் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உத்தப்பா, அம்பதி ராயுடு

வீரர் பொசிஷன் இன்னிங்ஸ் 50ஸ் 100ஸ் அதிக ரன்கள் மொத்த ரன்கள் சராசரி ஸ்ட்ரைக் ரேட்
உத்தப்பா ஓப்பனிங் 77 11 0 83* 2057 27.43 129.45
ராயுடு ஓப்பனிங் 15 2 1 100* 431 30.79 131.80

அம்பதி ராயுடு

2021 ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, மிடில் ஆர்டரில் விளையாடி வரும் அம்பதி ராயுடு ஓப்பனிங் இறங்க வாய்ப்பு உள்ளது. எனினும், தோனி அவரது ப்ளேயிங் 11-ல் பெரிதாக மாற்றம் செய்ய விரும்ப மாட்டார் என்பதால், ராயுடுவை மாற்றாது வேறு ஆப்ஷனை கையில் வைத்திருக்கலாம் என தெரிகிறது. 2018 ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணிக்காக ஷேன் வாட்சனுடன் அம்பதி ராயுடு ஓப்பனிங் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீசன்

2019-2020 சயித் முஸ்தாக் அலி கோப்பையில் ஜெகதீசனின் பெயர் ஓங்கி ஒலித்தது. இந்த தொடர் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் ஓப்பனிங் களமிறங்கிய ஜெகதீசன், சிறப்பான பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், சென்னை அணிக்காக பெரிதும் வாய்ப்பளிக்கப்படாத ஜெகதீசனை, ஃபார்மில் இருக்கும்போதே பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் மொத்தம் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனினும், வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர்களை தவிர, மொயின் அலி, சாம் கரண், புஜாரா என தோனி சர்ப்ரைஸ் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பொருத்திருந்து பார்ப்போம்!