இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2019-ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்த அவர், இப்போது கடைசியாக டி-20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதன் மூலம், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 






38 வயதான மலிங்கா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மொத்தம் 546 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அவர். 2019-ம் ஆண்டுக்கு பிறகு, டி-20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த அவர், இலங்கை அணியில் பெரிதும் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். முக்கியமான தொடர்களில் மலிங்காவின் பெயர் சேர்க்கப்படமால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில், மலிங்கா தனது தொடங்கி இருக்கும் புது யூட்யூப் சேனல் வழியே தனது ஓய்வுச் செய்தியை அறிவித்துள்ளார். மைதானத்தில் டி-20 போட்டியை விளையாடி முடித்தபின் இனி மலிங்காவுக்கு ஃபேர்வெல் வைக்க இயலாது. ஆனால், 2019-ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு அறிவித்தபோதே, கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வழி அனுப்பி வைத்தனர். 


15 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு விளையாடிய மலிங்காவின் கடைசி ஒரு நாள் போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்துக்குப் படையெடுத்திருந்தனர். 'We miss you Malinga' , 'Thank you Malinga' போன்ற போஸ்டர்களை ஏந்திய ரசிகர்கள் கொழும்பு பிரேமதேச கிரிக்கெட் மைதானத்தை ஆக்கிரமித்திருந்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை, சிறப்பாக விளையாடவில்லை என அணியிலிருந்து நீக்கப்படும்படியான சூழல் ஏற்படவில்லை. கடைசிப் போட்டி வரை மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸைக் கொடுத்து, தன்னுடைய ஓய்வை தானே முடிவு செய்து விடைபெற்றிருந்தார் மலிங்கா. 


ஒரு நாள் போட்டியில் இருந்து விடைபெற்ற போது, 'Guard of Honour' முறையில் மலிங்காவை வழி அனுப்பி வைத்தனர் இலங்கை வீரர்கள். மலிங்கா மைதானத்தை விட்டு வெளியேறும் வரை ரசிகர்களின் 'மலி...மலி..' சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது! இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால் சமூக வலைதளங்கள் வழியே! ’வி தேங்க்யூ மலிங்கா’