டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து வரும் 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்குகின்றன. இம்முறை இந்தியா சார்பில் 54 இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவருடமும் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
அதில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களுக்கு பெரிய நெருக்கடி இருந்தது. எனினும் அந்த காலத்திலும் உங்களுடைய விளையாட்டை நீங்கள் விடவில்லை. அதுவே உங்களுடை விளையாட்டு அர்பனிப்பை சரியாக உணர்த்துகிறது. நீங்கள் வெல்லும் பதக்கங்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் உங்களை பதக்கம் வெல்ல வேண்டும் என்று யாரும் நெருக்கடி தர மாட்டோம். உங்களால் முடிந்த 100 சதவிகித்தை கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
அதன்பின்னர் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் மாரியப்பன் இடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது மாரியப்பன்,”என்னுடைய ஒரே குறிக்கோள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பது தான். என் சிறுவயதில் நான் மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். அது என்னை பெரிதாக பாதிக்காத படி நான் பார்த்து கொண்டேன். 2011ஆம் ஆண்டு முதல் விளையாட்டில் பெருமை சேர்த்து வருகிறேன். ரியோ பாராலிம்பிக் போட்டிகளை போல் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். பாராலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. ஆகவே இம்முறை நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” எனக் கூறினார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் தேசிய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளார். மாரியப்பனை தொடர்ந்து தேவேந்திர ஜாஜாரியா, ஜோதி பாலன் உள்ளிட்டோருடனும் பிரதமர் கலந்து உரையாடினார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக வில்வித்தை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த முறை இந்திய வீரர் வீராங்கனைகளில் 9 போட்டிகளில் பங்கேற்கின்றனர். பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்திய 2 தங்கம், 1 வெள்ளி,1 வெண்கலம் வென்றுள்ளது. ஒரே பாராலிம்பிக் தொடரில் இரண்டு தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:‛என்ன பாக்குற... பார்க்கல சார்... முறைக்கிறேன்...’ இங்கிலாந்தில் கர்ஜித்த ஆட்டோ ஓட்டுநர் மகன் சிராஜின் பின்னணி!