காமன்வெல்த் போட்டிகள் லண்டனின் பிர்மிங்ஹாம் நகரில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி மொத்தமாக 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகள் நாடு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுடம் பிரதமர் மோடி நாளை கலந்துரையாட உள்ளார். அவர்கள் அனைவருடனும் பிரதமர் தன்னுடைய இலத்தில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேறபோகும் நிகத் ஸரீனின் கனவு:
காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஸரீன் தன்னுடைய ஆசை ஒன்றை வெளிப்படுத்தியிருந்தார். அதில், “பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் பேச வேண்டும். மேலும் என்னுடைய குத்துச்சண்டை கையுறையில் அவருடைய கையொப்பம் பெற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் நிகத் ஸரீன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது அவருடைய ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலப்பதக்கங்களை வென்று இருந்தது. அதிகபட்சமாக இந்திய அணி மல்யுத்த விளையாட்டில் 12 பதக்கங்களை வென்று இருந்தது. அத்துடன் பளுதூக்குதலில் 10 பதக்கங்களையும் வென்று இருந்தது.
காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவின் 5வது சிறப்பான செயல்பாடு இதுவாகும். காமன்வெல்த் வரலாற்றில் இந்திய அணி 2010ஆம் ஆண்டு அதிகபட்சமாக 101 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. அடுத்து 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே காமன்வெல் தொடரில் 3 தங்கம் ஒரு வெள்ளி அசத்திய சரத் கமல்:
2022 காமன்வெல்த் தொடரில் தமிழக வீரர் சரத் கமல் டேபிள் டென்னிஸ் போட்டியில் அசத்தினார். இவர் குழு பிரிவில் தங்கப்பதக்கமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் ஆடவர் இரட்டையர் பிரிவில் மற்றொரு தமிழ்நாடு வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளி வென்று அசத்தினார். மொத்தமாக ஒரே காமன்வெல்த் தொடரில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று அசத்தினார்.
சரத் கமலை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் டெல்லியில் சந்தித்து தன்னுடைய பாராட்டை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்