ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் மோதின. நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது.


முன்னிலையில் இருந்த தமிழ் தலைவாஸ்:


ஆட்டத்தை 3 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் முதல் புள்ளியுடன் தொடங்கியது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணி அதிரடியான தாக்குதல் ஆட்டத்தை ஆடினர். தமிழக வீரர மாசாணமுத்துவும் சிறப்பான ஆட்டத்தை ஆடினார். ரெய்டு வந்த வீரர்களை மடக்கிப்பிடித்தும், ரெய்டு சென்று பாயிண்ட்களை அள்ளியும் அபாரமாக ஆடினர் தமிழ் தலைவாஸ் அணியினர்.


சூப்பர் டேக்ள் பிரிவில் ஜெய்ப்பூர் அணி வீரர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கிய தமிழ் தலைவாஸ் அணி மொத்தமாக ஆல் அவுட்டாக்கி 12-5 என்று முன்னணிக்கு சென்றனர். அடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகும் ஜெய்ப்பூர் அணிக்கு தமிழ் தலைவாஸ் அணியினர் மிகுந்த சவால் அளித்தனர்.


போராடிய ஜெய்ப்பூர்:


ஆனாலும், கட்டாயம் பாயிண்ட்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் ஆடிய ஜெய்ப்பூர் அணிக்காக கரூரைச் சேர்ந்த அஜித்குமார் பாய்ண்ட் எடுக்க முயற்சித்தார். ஆனாலும், தமிழ் தலைவாஸ் வீரர்களும் சிறப்பாக ஆடி அவரை மடக்கினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளில் முன்னிலையிலே இருந்தனர்.


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக அர்ஜூன் புள்ளிகளை எடுக்க அடுத்தடுத்து ரெய்டு வந்தார். டூ ஆர் டையில் வந்த ஜெய்ப்பூர் வீரர்களையும் தமிழ் தலைவாஸ் அணி மடக்கியது. பதிலுக்கு டூ ஆர் டையில் சென்ற தமி் தலைவாஸ் வீரரையும் ஜெய்ப்பூர் அணியினர் மடக்கினர். ஜெய்ப்பூர் அணியினர் பல சமயங்களில் 4 வீரர்களுடன் மட்டுமே ஆடினர். 


ஆட்டத்தை மாற்றிய அஜித்:


ஜெய்ப்பூர் அணிக்காக கரூரைச் சேர்ந்த அஜித்குமார் புள்ளிகள் எடுக்க போராடினார். சூப்பர் டேக்ள் ஆன் வாய்ப்பையும் ஜெய்ப்பூர் வீரர்கள் வீணடித்தனர். அதன்பின் கிடைத்த சூப்பர் டேக்கிள் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். இதனால், 6 புள்ளிகளில் இருந்து 4 புள்ளிகள் வித்தியாசமாக மாறியது. ஆனாலும், ரெய்டுக்கு வந்த ஜெய்ப்பூர் வீரர்களை மடக்கி மீண்டும் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் புள்ளிகளை ஏற்றியது.


ஆனாலும், 2 பேர் மட்டுமே உள்ளே இருந்த நிலையில் ஜெய்ப்பூர் வீரர்கள் தமிழ் தலைவாஸ் வீரரை மடக்கி தமிழ் தலைவாஸ் அணிக்கு சவால் அளித்தனர். சூப்பர் டேக்ள்ஸ் பிரிவில் கிடைத்த வாய்ப்பை மிகவும் அருமையாக பயன்படுத்திய ஜெய்ப்பூர் அணி தமிழ் தலைவாஸ் அணியை நெருங்கும் வகையில் புள்ளிகளை எடுத்தனர். ரெய்டுக்கு சென்ற தமிழ் தலைவாஸ் வீரரை ஜெய்ப்பூர் வீரர்கள் மடக்கிப்பிடித்ததால் ஆட்டம் 2 நிமிடங்கள் இருந்த நிலையில் சமனுக்கு வந்தது. கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில், ஜெய்ப்பூருக்காக வந்த கரூரைச் சேர்ந்த அஜித்தால் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் பெற்று முன்னிலைக்கு சென்றது.


ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி:


இதனால், ஆட்டம் முடிந்தபோது ஆட்டம் 25 -24 என்று முடிவுக்கு வந்தது. 1 புள்ளி வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணியில் ரேசா, சுனில் டேக்ள் சுற்றில் அசத்தலாக ஆடினர். கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.