CM Stalin: தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களை புரட்டி போட்ட மழை:
கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் எனவும் தென்காசி, கன்னியாகுமரி மக்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்றும தெரிவிக்கப்பட்டது.
மேலும், நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
"தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது”
இந்த நிலையில், தென்மாவட்ட மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, “பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களின் நலனுக்காக மருத்துவத்துறை அமைச்சர் தலைமையில் 2,500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.