ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 23 வயது இளைஞர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அவரது சாதனையை போற்றும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் நிறுவனம் ஒன்று நீரஜ் என பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அரவிந்த் ஏஜென்சிஸ் என்ற பெயரில் இயங்கும் பெட்ரோல் பங்க்கின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ’நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம், வரும் போது ஆதார் அட்டை கொண்டு வரவும், இந்த சலுகை 13ஆம் தேதி மாலை 6 மணி வரை மட்டுமே’ என்று பலகையில் எழுதப்பட்டிருந்த புகைப்படங்கள் காட்டுத்தீ போல சமூகவலைத்தளங்களில் பரவியது.

 

கரூரைச் சேர்ந்த பெட்ரோல் பங்கின் இந்த வினோதமான சலுகை குறித்து பெட்ரோல் நிரப்ப வரும் நுகர்வோர்களிடம் கருத்துகளை கேட்டோம். நீரஜ் என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிச்சயம் யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனவும் இது வெறும் கண்துடைப்புக்காக பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரத்தை செய்து வருவதாகவும் கூறினர்.

ஒரு சிலர் நுகர்வோர்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. எனவே இன்றைய காலத்தில் பெட்ரோல் தற்போது விற்கும் விலைக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக விளையாட்டு வீரர் பெயர் கொண்ட நபர்களுக்கு வழங்கப்படுவது  பாராட்டுக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

நீரஜ் என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற வினோத அறிவிப்பு குறித்து அரவிந்த் ஏஜென்சிஸ் நிறுவன உரிமையாளரான மலையப்பசாமியிடம் பேசினோம்

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவே நீரஜ் என்று பெயர் வைத்தவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டதாக அரவிந்த் ஏஜென்சீஸ் நிறுவன உரிமையாளர் மலையப்பசாமி கூறினார். மேலும், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற இந்த சலுகையானது நாளை (13.08.2021) மாலை 6 மணியுடன் முடிவடைவதால் நீரஜ் என்று பெயர் வைத்துள்ள நபர்கள் உடனடியாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இரண்டு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கும் இந்த அறிவிப்பை நுகர்வோர்கள் சிலர் வெறும் கண் துடைப்பு என கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, இதுவரை எனது பெட்ரோல் பங்க்கில் நீரஜ் என்ற பெயர் கொண்ட மூன்று நபர்கள் இலவசமாக பெட்ரோல் நிரப்பி  இருக்கிறார்கள் என கூறினார். இந்த பெட்ரோல் இலவசம் செய்தியை கரூரில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாகவும் பாராட்டியும் தங்களது பதிவுகளை செய்து வருகின்றனர் என்றார்.