பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் கால்பந்து வீரர் பீலே (வயது 82) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது. அவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கீமோதெரப்பி சிகிச்சையில் பலன் அளிக்காததால் தற்போது நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.
உடல்நலம் குறித்து அப்டேட்:
"பீலே கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் உடல்நிலை சீராக உள்ளது" என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக பீலே இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நண்பர்களே, அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். மிகுந்த நம்பிக்கையுடன், வழக்கம் போல் எனது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன். நான் பெற்ற அனைத்து கவனிப்புக்கும் முழு மருத்துவ மற்றும் நர்சிங் குழுவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகம் முழுவதும் உங்களிடமிருந்து நான் பெறும் ஒவ்வொரு அன்பின் செய்தியும் என்னை ஆற்றலுடன் வைத்திருக்கிறது. உலகக் கோப்பையில் பிரேசிலையும் பாருங்கள். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்தின் முடிசூடா மன்னன் பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார் பீலே. கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் போட்டவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.
அவர் மொத்தம் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.
களம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, சிறப்பாக பந்தை வலைக்குள் தள்ளும் முறை, லாவகமாக இரண்டு முதல் மூன்று தற்காப்பு வீரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தி இலக்கு தவறாமல் பந்தை வலைக்குள் தள்ளும் தந்திரம் என இவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருந்தன.