Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக, நட்சத்திர வீரர்களுக்காக இந்திய அரசு செலவழித்துள்ள தொகை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்:
பாரிஸ் ஒலிம்பிக் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. பதக்க வேட்டைக்கு இந்திய அணி தயாராக உள்ளது. சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் விளையாட்டு வீரர்கள் உறுதியாக உள்ளனர். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்களை தயார்படுத்த இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிக பணம் செலவழித்து அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
நீரஜ் சோப்ரா:
கடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்தார். இந்த முறையும் அவர் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். இதற்காக நீரஜ் சோப்ரா பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தால், ஐரோப்பாவில் பயிற்சி பெற்றார். நீரஜ் மீது மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ. 5.72 கோடி செலவிட்டுள்ளது.
ஆண்கள் ஹாக்கி அணி:
ஒலிம்பிக் பதக்கத்திற்கான 41 ஆண்டு காத்திருப்பை, டோக்கியோவில் வென்ற வெண்கலப் பதக்கத்தின் மூலம் ந்திய ஆடவர் ஹாக்கி அணி முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த முறையும் பதக்கம் வெல்லும் முனைப்பில் அணி தயாராகி உள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஹாக்கி அணி பயிற்சி பெற்றது. ஹாக்கி அணிக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ. 41.81 கோடி செலவிட்டுள்ளது.
சாத்விக் - சிராக் ஷெட்டி:
ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றனர். இந்த ஜோடி தங்கம் வெல்லும் என எதிர்பார்பு அதிகரித்துள்ளதால், அவர்களுக்காக ரூ. 5.62 கோடி மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது.
பி.வி. சிந்து:
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், டோக்கியோ 2020ல் வெண்கலமும் வென்றார். இந்த முறை அவர் தங்கத்தை குறிவைத்ததுள்ளார். பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில், சிந்துவின் பயிற்சிக்காக ரூ. 3.13 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மீராபாய் சானு :
டோக்கியோவில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, பாட்டியாலாவில் ரூ. 2.74 கோடி செலவில் பயிற்சி பெற்றுள்ளார்.
மனு பாகர்:
பாரீஸ் நகரில் துப்பாக்கி சுடும் நட்சத்திரம் மனு பாகர் பதக்கம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு பயிற்சி அளிக்க விளையாட்டு அமைச்சகம் ரூ.1.68 கோடி செலவிட்டுள்ளது.
ரோஹன் போபண்ணா & மனிகா பத்ரா:
டென்னிஸ் வீரரான 44 வயதான ரோஹன் போபண்ணா பயிற்சிக்காக ரூ. 1.56 கோடியும், டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மனிகா பத்ராவின் பயிற்சிக்காக ரூ. 1.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
வினேஷ் போகட்:
நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டின் பயிற்சிக்காக ரூ. 70.45 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. நிகத் ஜரீன் பயிற்சிக்காக ரூ. 91.71 லட்சமும், லவ்லினா பயிற்சிக்காக ரூ.81.76 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.
அணிகளுக்கான ஒதுக்கீடு பின்வருமாறு:
- வில்வித்தை அணி: ரூ. 39.18 கோடி
- தடகளம்: ரூ. 96.08 கோடி
- பேட்மிண்டன்: ரூ.72.03 கோடி
- குத்துச்சண்டை: ரூ. 60.93 கோடி
- குதிரையேற்றம்: ரூ. 95.42 லட்சம்
- கோல்ஃப்: ரூ. 1.74 கோடி
- ஹாக்கி: ரூ. 41.30 கோடி
- ஜூடோ: ரூ. 6.33 கோடி
- படகோட்டம்: ரூ. 3.89 கோடி
- படகோட்டம்: ரூ. 3.78 கோடி
- படப்பிடிப்பு: ரூ. 60.42 கோடி
- நீச்சல்: ரூ. 3.90 கோடி
- டேபிள் டென்னிஸ்: ரூ. 12.92 கோடி
- டென்னிஸ்: ரூ. 1.67 கோடி
- பளு தூக்குதல்: ரூ. 27 கோடி
- மல்யுத்தம்: ரூ. 37.80 கோடி