உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. தற்போது இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 15வது இடத்திலும், பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 13வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  பாரீஸ் ஒலிம்பிக் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. 


இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் வருகின்ற பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. தரவரிசை அடிப்படையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  






இதுகுறித்து சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கான போட்டியில் இந்தியா, ஸ்வீடன், போலந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளன. 


இதேபோல், ஆண்களுக்கான போட்டியில் குரோஷியா, இந்தியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன” என தெரிவித்துள்ளது. 


கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி களமிறங்கியது. இதையடுத்து, 2008க்கு பிறகு அதாவது சரியாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் விளையாட உள்ளது. அதேபோல்,, தகுதிபெற்றதன் அடிப்படையில் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் இந்திய மகளிர் அணி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். 






இதுகுறித்து இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் தனது ட்விட்டர் பதிவில், “ ஒலிம்பிக் போட்டிக்கான குழுப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ரொம்ப நாளா இதைப் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன். ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் நான் விளையாட இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்ற மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள். இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இது ஒரு அற்புதமான சாதனையாகும்” என குறிப்பிட்டு இருந்தார். 


சமீபத்தில், பூசானில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு உலக அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால், இரு அணிகளும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நேரடி வாய்ப்பை தவறவிட்டனர்.  இருப்பினும், தற்போது அந்த சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, ஏழு இடங்கள் காலியாக இருந்ததன் அடிப்படையில், தரவரிசையை அடிப்படையாக கொண்டு இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் தகுதிபெற்றன.