ஜெர்மனியில் நடைபெற்ற உலக உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் போசியா ஆட்டத்தின் இரட்டையர் பிரிவில் மார்க் தர்மாய் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.


உலக உயரம் குறைந்தவர்களுக்கான போட்டி:


உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி அண்மையில் ஜெர்மனியில் தொடங்கியது. இதில் 22 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 505 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்களில், மும்பை நகரின் பாந்த்ரா பகுதியை சேர்ந்த பாராலிம்பிக் தடகள வீரரான மார்க் தர்மாயும் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற போசியா விளையாட்டின் இரட்டையர் பிரிவில், மார்க் தர்மாய் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த போட்டியில்  மேலும் நான்கு பதக்கங்களை அவர் வென்றார். 


சிறப்பு கவுரவம்:


போசியா விளையாட்டு மட்டுமின்றி வட்டு எறிதல் மற்றும் பூப்பந்து இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கங்களையும், பூப்பந்து மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கங்களையும் மார்க் தர்மாய் வென்றார். சர்வதேச அளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய அவரை கவுரவிக்கும் விதமாக, அவர் பயிற்சி செய்யும் பாந்த்ரா ஜிம்கானா மையத்தில் அவருக்கு கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பதவியை வழங்கப்பட்டுள்ளது.


இதுவரை படைத்த சாதனைகள்:


சிறு வயதிலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ள தர்மாய், 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் தனது சர்வதேச பயணத்தை தொடங்கினார். அஅந்த போட்டியில் அவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றார். தொடர்ந்து 2010 காமன்வெல்த் விளையாட்டுகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் மற்றும் 2012 லண்டன் பாராலிம்பிக்ஸில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் உட்பட பல சாதனைகளை படைத்துள்ளார்.


யார் இந்த மார்க் தர்மாய்:


உடலில் உள்ள குறைபாடு காரணமாக துவண்டு போகாமல், தனக்கு பிடித்த விளையாட்டில் சாதிக்க விடா முயற்சி மேற்கொண்டார். அதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்து, பலருக்கும் உத்வேகம் அளிக்கும் நபராக மாறியுள்ளார். உயரம் குறைந்த நபர்களுக்கான இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போதும், தொடர்ந்து யோகா, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். 


ஜிம்கானாவின் வாழ்நாள் கெளரவ உறுப்பினர் என்பது எனது வாழ்க்கைக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என தர்மாய் பேசியுள்ளார். அதன்படி,  ”எனக்கு கிடைத்துள்ள வாழ்நாள் கௌரவ உறுப்பினர் பதவி விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இங்குள்ள உறுப்பினர்கள் எனக்கு மிகுந்த ஆதரவு அளிக்கின்றனர்.  நான் தினமும் ஜிம்கானா வீரர்களுடன் பேட்மிண்டன் விளையாடுகிறேன். மேலும் மற்ற பாரா வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன்” என தர்மாய் கூறியுள்ளார்.