இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகாது என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி அறிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச போட்டியை காண ஆர்வமாக காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏன் பாகிஸ்தான் விளையாடும் போட்டி பாகிஸ்தானில் ஒளிபரப்பு ஆகாது ?


தெற்கு ஆசிய நாடுகளுக்கான முழுமையான ஒளிபரப்பு உரிமத்தை இந்திய நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது, அதுவே பாகிஸ்தான் அணி விளையாடும் தொடரை அங்கே ஒளிபரப்பு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளதன்படி "இந்தியாவுடன் மீண்டும் வணிகம் என்பது, ஆகஸ்ட் 5 2019 அன்று இந்திய அரசு எடுத்த முடிவை திரும்ப பெற்றால் மட்டுமே சாத்தியம்" என்றுள்ளார்.


மேற்கூறிய தேதியில் இந்தியா ஜம்மு-காஷ்மீரின் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்தை இயற்றியது. அதனால் இந்தியாவுடன் வணிக ரீதியிலான எந்த தொடர்பும் பாகிஸ்தான் வைத்து கொள்ளாமல் உள்ளது.


"தெற்காசியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைகளை இந்திய நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் வியாபாரம் செய்ய முடியாது” என்று ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


இதன் விளைவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் பிடிவி ஆகியவை கணிசமான இழப்புகளை சந்திக்கும் என்றும் தகவல் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 8-ஆம் தேதி பாகிஸ்தான் இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் துவங்குகிறது.


யார் அந்த இந்திய நிறுவனம் ?


இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளை ஒளிபரப்பும் மற்றும் ஸ்ட்ரீம் செய்வதற்கான உரிமம் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா (எஸ்.பி.என்) நிறுவனத்திடம் தான் இருக்கிறது.


மன வேதனையில் பாகிஸ்தான் ரசிகர்கள் 


நீண்ட நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி விளையாடுவதை காண ஆவலுடன் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. நம் நாடு விளையாடுவதை நமது தொலைக்காட்சியில் காண முடியாத நிலையா என பாகிஸ்தான் ரசிகர்கள் அந்நாட்டு அரசாங்கத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.