இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட போர் பதற்றம் நிலவும் வேளையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா நடத்தியது. அதைத் தொடர்ந்து, மறுநாளே இந்தியாவின் மீது தாக்குதலை தொடங்கியது பாகிஸ்தான்.

இந்தியாவில் 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்த முற்சித்தது. பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணும் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. அதையும் இந்திய ராணுவம் தடுத்தி நிறுத்தி அழித்து, பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் வரும் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், போர் பாதுகாப்பு நடவடிக்கையின் எதிரொலியாக சைரன் ஒலிக்கப்பட்ட நிலையில், முக்கிய நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

இப்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்றுவந்த பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

10-வது சீசனில் 6 அணிகள் பங்கேற்று விளையாடிவந்த பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், எஞ்சிய போட்டிகளை அங்கு நடத்த அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், போட்டிகளை நடத்த முடியாமல், பிஎஸ்எல் கிரிக்கெட் பேட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.