india Pakistan War Tension: பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக இந்திய எல்லைப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


ட்ரோன் தாக்குதல்:


வடக்கில் பாரமுல்லா முதல் தெற்கில் பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு ஆகிய இரண்டிலும் 26 இடங்களில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆயுதமேந்திய UAV களும் அடங்கும். பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதன்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்பட்டுள்ளன.  ஃபெரோஸ்பூரில் குடியிருப்புப் பகுதியை ஆயுதமேந்திய ட்ரோன் தாக்கியதில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம், தெற்கு காஷ்மீரின் அவந்திபோரா விமான தளம் உள்ளிட்ட பல நிறுவல்கள் மீதும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின, ஆனால் அவை இந்திய ஆயுதப் படைகளால் முறியடிக்கப்பட்டன.






தீவிர கண்காணிப்பில் ராணுவம்:


இதற்கிடையில், இந்திய ஆயுதப்படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன, மேலும் இதுபோன்ற அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் கண்காணிக்கப்பட்டு எதிர்-ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி அழிக்கப்படுகின்றன. நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பீதி தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.






இருளில் மூழ்கிய எல்லைப்பகுதிகள்:


முன்னதாக இந்திய இராணுவ நிலைகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளை,  இந்தியா முறியடித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தின் மீது இரவு 9 மணியளவில் ஒரு ட்ரோன் பறப்பதைக் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இதனால் தாக்குதலை செயலிழக்கச் செய்ய மின் தடை விதிக்கப்பட்டது. அந்த ட்ரோனை ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு பொதுமக்கள் பகுதியை ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குவதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.  முன்னதாக, ஜம்மு பகுதியிலும் தெற்கு காஷ்மீரிலும் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, மேலும் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. போர் எச்சரிக்கையான சைரன் ஒலி எழுப்பபப்ட்டு பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் போன்ற பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


இந்தியா பதிலடி:


இதனிடையே, இன்று அதிகாலை பல பாகிஸ்தான் விமானத் தளங்களில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான அமைப்பும் அடங்கும். இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டின் வான்வெளியை அனைத்து பொதுமக்கள் மற்றும் வணிகப் போக்குவரத்திற்கும் மூடியது. இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலும், நாட்டின் ராணுவ தலைமையகத்திற்கு அருகிலும் உள்ள முக்கிய தளமான ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளம் உட்பட மூன்று விமானப்படை அமைப்புகளில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நூர் கான் விமானத் தளம் மட்டுமின்றி, சக்வால் நகரில் உள்ள ம முரித் விமானத் தளம் மற்றும் பஞ்சாபின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிக் விமானத் தளமும் தாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 10 மணியளவில் இந்திய ராணுவம் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.