வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, தனது பந்தில் சிக்ஸர் அடித்த வங்கதேச வீரரை பந்தால் அடித்து காயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நேற்று மஹ்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்திற்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது.
முகமது வாசிம் தொடக்க ஆட்டக்காரர் முகமது நைமின் விக்கெட்டை எடுத்த பிறகு மூன்றாவது ஓவரில் அஃபிஃப் பேட்டிங் செய்ய வந்தார். அவர், அஃப்ரிடி பந்துவீச்சில் பெரியர் சிக்ஸர் அடித்தார். இதனால், கொதித்துப்போன அஃப்ரிடி அடுத்த பந்தை ஆவேசமாக வீசினார். அஃப்ரிடி வீசிய நல்ல லெந்த் பந்தை, அஃபிஃப் தடுத்தி நிறுத்தி விளையாடினார். அந்த பந்தை தனது கையால் எடுத்த அஃப்ரிடி, அஃபிஃப் மீது வீசினார். பந்து அவரின் கணுக்காலில் பட்டதை தொடர்ந்து அவர் தரையில் விழுந்து வலியால் துடித்தார்.
அஃப்ரிடி பெரும்பாலும் ஸ்டம்புகளை குறிவைத்திருக்கலாம், ஆனால் அஃபிப்பை அவரது கணுக்காலில் அடித்து நொறுக்கினார். அதன்பிறகு, அஃப்ரிடி தன் கைகளை உயர்த்தி, அடித்தவரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர், கேப்டன் பாபர் ஆசாமும் வந்து அபிப்பிடம் வந்து நலம் விசாரித்தார். முன்னதாக, அஃப்ரிடி, தொடக்க வீரர் சைஃப் ஹாசனை கோல்டன் டக் செய்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தபோட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. போட்டி முடிந்த பிறகு அஃப்ரிடியும், அஃபிப்பும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி காணப்பட்டனர்.
வீடியோ இதோ
சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு முதல்தர போட்டியான ஷெஃபீல்ட் ஷீல்டில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் டேனியல் ஹியூஸ் மீது விக்டோரியாவின் ஜேம்ஸ் பாட்டின்சன் பந்தால் கணுக்காலில் அடித்தார். உடனே அவர் மன்னிப்பும் கேட்டார். பின்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு பேட்டின்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்தது. ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
பாட்டின்சனுக்கும் ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது, அதாவது கடந்த வெள்ளிக்கிழமை NSW க்கு எதிரான விக்டோரியாவின் ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாட்டின்சன் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்