இந்தியாவில் அதிக மக்கள் பின் தொடரும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் ஆதரவு எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் கிடைப்பதில்லை. சமீபத்தில் பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு சற்று அங்கீகாரம் கிடைக்க தொடங்கியுள்ளது. 


எனினும் ஒரு காலத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய விளையாட்டான ஹாக்கி க்கு பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை. ஏனென்றால் ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் வரலாற்றில் 1980ஆம் ஆண்டு வரை இந்திய 8 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அதன்பின்னர் புல் தரைக்கு பதிலாக செயற்கை ஆடுகளம் பயன்படுத்தப் பட்டது. 




இதனால் ஐரோப்பிய நாடுகள் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆசிய நாடுகள் ஹாக்கி விளையாட்டில் சற்று பின் தங்க தொடங்கின. இருப்பினும் சமீப காலங்களாக இந்திய அணி மீண்டும் ஹாக்கியில் பெரியளவில் ஒரு எழுச்சியை கண்டு வருகிறது. 


 


குறிப்பாக தற்போதைய சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் ப்ரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை இந்திய அணி தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றது. 


 






இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பிரபல ஓட்டல் நிறுவனமான ஒயோ ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அதிக ஆதரவு கிடைக்கும் வரை மற்ற விளையாட்டுகளுக்கு ஆதரவு கிடைக்காது. ஆனால் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை விட சலுகை தருவது பிடிக்கும். ஹாக்கி என்ற ப்ரோமோ கொட்டை பயன்படுத்தி 45 சதவிகிதம் சலுகை பெறுங்கள்.


இது அர்ஜென்டினாவை இருமுறை இந்தியா தோற்கடித்தற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் நாம் ஹாக்கியை நினைவில் கொள்வோம் ” எனப் பதிவிட்டுள்ளது. இதனை ஹாக்கி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளது. அதில்,”இது ஒரு JOYOS வெற்றி” எனப் பதிவிட்டுள்ளது.  இதன்மூலம் ஒயோ நிறுவனத்தின் ஆதரவை ஹாக்கி இந்தியா வரவேற்றுள்ளது. 


 






இந்தாண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று ஹாக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதற்கு தற்போதைய ப்ரோ லீக் ஹாக்கி தொடர் மிகவும் முக்கியமான தயாரிப்பாக அமைந்து வருகிறது. இந்திய ஹாக்கி அணி அடுத்து வரும் மே மாதம் இங்கிலாந்தில் கிரேட் பிரட்டன் அணிக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.