பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி  முடிவடைந்தது. இதில், அமெரிக்கா  40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.


20 தங்களை வென்ற ஜப்பான் மூன்றாவது இடத்தையும், 18 தங்கம் வென்ற ஆஸ்திரேலியா நான்காவது இடத்தையும் 16 தங்கம் வென்ற பிரான்ஸ் 5 வது இடத்தையும் பிடித்து. இந்தியாவை பொறுத்தவரை 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 71 வது இடத்தை பிடித்தது. அந்தவகையில் வெள்ளி பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றுக்கொடுத்தார்.  இச்சூழலில் தான் நீராஜ் சோப்ரா மற்றும் மனு பாக்கர் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  மற்றொரு வீடியோவில் மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் வேடிக்கையாக பேசிக் கொண்டு இருந்தார்.


அப்போது நீரஜ் சோப்ராவின் கைகளை எடுத்து தனது தலையில் வைத்து ஆசீர்வாதம் வாங்குவது போல செய்தார். அதை வைத்து தனது மகளுக்கு அவர் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரை பேசி முடிக்க முயற்சி செய்கிறார் எனவும் நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.


மனு பாக்கரின் தந்தை விளக்கம்:


இந்நிலையில் மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் மனு பாக்கரின் திருமண செய்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில்,"மனு பாக்கர் சின்ன வயசு தான். இன்னும், திருமண வயசு கூட ஆகவில்லை. ஆதலால், திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கவே இல்லை. நீரஜ் சோப்ராவை தங்களது மகனாகத்தான் பார்க்கிறோம்"என்று கூறினார்.


நீரஜ் சோப்ராவின் தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உறவினர் பேசுகையில்,"நீரஜ் சோப்ராவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மட்டும் நடக்காது. உலகம் அறியும் வகையில் தான் நீரஜ் சோப்ராவின் திருமணம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.