பாரீஸ் ஒலிம்பிக் 2024:
ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத் ஆனால் இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று வினேஷ் போகத் 100 கிராம் கூடுதலாக இருந்ததன் காரணமாக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இருந்ததால், வினேஷ் போகத் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டது இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர், விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்றும் வினேஷ் போகத்திற்கு பதக்கம் மறுக்கப்பட்டது. இதையடுத்து, பாரிஸில் இருந்து நேற்று வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனைத்தொடர்ந்து வினேஷ், பஜ்ரங் புனியா மற்றும் பலர் ஹரியானாவில் உள்ள அவரது சொந்த கிராமமான பலாலிக்கு சென்றனர்.
தங்கபதக்கம் வழங்கிய கிராமத்தினர்:
அப்போது வினேஷ் போகத்திற்கு தலைப்பாகை கட்டி பண மாலை போட்டி சிறப்பான வரவேற்பை கிராம மக்கள் அளித்தனர். அதோடு கிராமப் பெரியவர்கள் வினேஷ் போகத்திற்கு தங்கபதக்கம் வழங்கி கெளரவித்தனர். இதனைத்தொடர்ந்து வினேஷ் போகத் பேசுகையில், "எனது கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு மல்யுத்தத்தில் என்ன கொஞ்சம் தெரிந்தாலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன், அதனால் அவர்கள் முன்னேறி என் இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்.
நீங்கள் அனைவரும் என் சகோதரிகளை ஆதரித்து அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,ஒலிம்பிக் பதக்கம் பெறாதது ஒரு ஆழமான காயம், அது குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் எனது நாட்டினரிடமும், எனது கிராம மக்களிடமும் நான் கண்ட அன்பு, அது எனக்கு பலம் தரும். மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு 1,000 தங்கப் பதக்கங்களுக்கு மேல்"என்று கூறினார்.