Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவிற்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா:


பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், 89.45 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் 2020ல் தங்கப் பதக்கம் வென்ற அவரால்,  இந்த முறை வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதேநேரம், பாகிஸ்தானின் அர்சாத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்ததன் மூலம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அர்ஷாத்தின் ஒலிம்பிக் சாதனை மூலம்,  1992 பார்சிலோனா ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தனது முதல் பதக்கத்தைப் பெற உதவியது. தெற்காசிய நாட்டிலிருந்து மூன்றாவது தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை அர்ஷத் பெற்றுள்ளார்.






வெள்ளி வென்ற ”தங்கமகன்”


பாரிஸ் ஒலிம்பிக்கின் போது நீரஜ் சோப்ரா இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வந்தார், இதனால் அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இருப்பினும், அத்தகைய சந்தேகங்கள் அனைத்தும் தகுதிச் சுற்றுகள் மூலம் முடிவுக்கு வந்தன. அதில் அபாரமான திறமையை வெள்ப்படுத்திய நீரஜ் சோப்ரா, இந்த முறையும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெள்ளி பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆனால், சுஷில் குமாருக்குப் பிறகு, தனிநபர் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நாட்டின் இரண்டாவது ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் சோப்ரா ஆவார், இது இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேற உதவியது. 


குவியும் வாழ்த்துகள்:


வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நீரஜ் சோப்ரவின் வீட்டில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. சமூக வலைதலங்களிலும், நிரஜ் சோப்ராவிற்கு இந்தியர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.