பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 51 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 58 வது இடத்தில் உள்ளது.


இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது ஒலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க வந்த உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லவா மஹுசிக் மைதானத்தில் கொஞ்ச நேரம் படுத்து தூங்கிய பின் தங்கப்பதக்கம் வென்ற சம்பவம் தான் அது.


அதாவது இன்றைய போட்டியில் விளையாடுவதற்காக யாரோஸ்லவா மஹுசிக் மைதானத்திற்கு வந்துள்ளார். அப்போது தன்னுடைய போட்டி நேரம் வருவதற்கு சற்று தாமதம் ஆகி உள்ளது. இதனால் தான் விளையாட்டு பொருட்கள் வைத்திருக்கும் பேக்கை தலைக்கு தலையணையாக வைத்து தூங்கியுள்ளார்.


மைதானத்திலேயே குட்டி தூக்கம் போட்ட வீராங்கனை:


பின்னர் தமது போட்டி வந்தவுடன் இரண்டு மீட்டர் உயரம் உள்ள கம்பியை அபாரமாக தாண்டி யாரோஸ்லாவா தங்க பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"போட்டியின் போது இதுபோல் படுத்து வானத்தில் உள்ள மேக கூட்டங்களை பார்த்து ரசிப்பேன்.


சிலர் சமயம் ஒன்று, இரண்டு, மூன்று என்று நம்பர்களை எண்ணுவேன். இல்லையென்றால் மூச்சுப் பயிற்சி செய்வேன். இதன் மூலம் பதற்றமான சூழலில் மனதை நிதானமாக்குவேன். இதன் மூலம் தமது செயல்திறன் அதிகரிக்கிறது. மைதானத்திற்கு இருக்கிறோமா? இல்லை வெளியே இருக்கிறோமா என்பதெல்லாம் பார்க்க மாட்டேன்" என்று கூலாக கூறியுள்ளார். அதேபோல் தன்னுடைய வெற்றியை உக்ரைன் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.